

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மக்கள் விரைவாக பதிவு செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத் துறை செயலர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
'ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா' இந்தியாவில் 50 கோடி பயனாளிகளை இலக்காக கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய அரசு நிதியுதவி அளிக்கும் மருத்துவக் காப்பீடு திட்டம். இத்திட்டத்தில் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை ஒரு வருடத்துக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.
இத்திட்டம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் செலவுகளை உள்ளடக்கும்.
புதுச்சேரி அரசு இத்திட்டத்தின் கீழ் அனைத்து சிவப்பு அட்டைதாரர்களுக்கும் காப்பீடு வழங்க அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக சிவப்பு நிற குடும்ப அட்டை (அசல்) மற்றும் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களைக் கொண்டு இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இதனை மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் இலவச அரிசி வழங்கும் மையங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம்.
அவ்வகையில் அரசு ஆரம்பப் பள்ளி ஜீவானந்தபுரம் லாஸ்பேட்டை, அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி வாணரபேட்டை, யூத் ஹாஸ்டல் முத்தியால்பேட்டை ஆகிய 3 இடங்களில் நடைபெறுகிறது.
மேற்கூறிய இடங்களில் முதற்கட்டமாக கடந்த 2-ம் தேதி தொடங்கி வரும் 9-ம் தேதி வரை நடைபெறும் முகாமில் பொது மக்கள் தங்கள் ஆவணங்களை கொண்டு பதிந்து, மறுநாள் ஆயுஷ்மான் பாரத் அட்டையை அவசியம் மறக்காமல் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கடந்த 5-ம் தேதி மட்டும் 1,143 நபர்களுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 565 குடும்பங்கள் இக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று இக்காப்பீட்டு திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆனந்தலட்சுமி தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யாதவர்கள் விரைவில் பதிந்து பயன் பெற வேண்டும். மேலும் தகவலுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை (1800-425-7157) தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.