

திண்டுக்கல் மாவட்ட டி.ஐ.ஜி., எஸ்.பி. ஆகிய பதவிகளில் மகளிரே உள்ளதால் மாவட்டக் காவல் துறை மகளிரின் ஆளுமையில் செயல்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக மு.விஜயலட்சுமி உள்ளார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக திலகவதி உள்ளார். திண்டுக்கல், பழநி கோட்டாட்சியர்களாக மகளிரே பணியில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் மகளிரின் ஆளுமையில் சிறப்பாக செயல்படும் நிலையில், தற்போது திண்டுக்கல் டி.ஐ.ஜி.யாக விஜயகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ரவளிபிரியா பணிபுரிந்து வருகிறார். டி.ஐ.ஜி., எஸ்.பி. ஆகிய இரு உயர் பதவிகளிலும் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் மகளிர் ஆளுமையில் உள்ள மாவட்டமாக திண்டுக்கல் மாறியள்ளது.
அதோடு, மாவட்ட முதன்மை நீதிபதியாக ஜமுனா உள்ளார். வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத சிறப்பாக திண்டுக்கல்லில் மாவட்ட நிர்வாகம், காவல் துறை மற்றும் நீதித் துறை நிர்வாகம் பெண்களின் தலைமையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.