

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் பிளவக்கல் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது.
வில்லிபுத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடிநீருக்குப் பிரதான நீராதாரமாக விளங்குவது பிளவக்கல் பெரியாறு அணை. இது மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மலைப்பகுதி மற்றும் வில்லிபுத்தூர் பகுதியில் வெப்பச்சலனம் காரணமாக பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
47 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 33 அடியாக இருந்தது. ஆனால் ஒரே நாள் இரவில் 4 அடி உயர்ந்து, நேற்று காலை நீர்மட்டம் 37 அடியாக இருந்தது.
தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும். எனவே அணையின் முழு கொள்ளளவான 47 அடியை விரைவில் நெருங்க வாய்ப்புள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.