

`இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலியாக காரைக்குடியில் 9 நரிக்குறவர் குடும்பங்களுக்கு உடனடியாக ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.
காரைக்குடி வேடன் நகரில்100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் பறவைகளை வேட்டையாடுவது, திருவிழாக்கள்,பேருந்து நிலையங்களில் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்வது போன்ற தொழில்களை செய்து பிழைக்கின்றனர்.
கரோனா ஊரடங்கால் வேலையின்றி இவர்கள் உணவுக்கே சிரமப்பட்டனர். இவர்களில் பலருக்கு ரேஷன் கார்டு இல்லாததால் அரசு அறிவித்த நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம் பெற முடியாத நிலை இருந்தது. இது குறித்து மே 4-ம் தேதி ‘இந்து தமிழ் திசை' நாளிதழில் செய்தி வெளியானது.
இதை யடுத்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி உத்தரவில் குடிமைப் பொருட்கள் வழங்கல் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தி 9 பேருக்கு உடனடியாக ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுத்தார்.
மேலும் 32 பேருக்கு விரைவில் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர 11 பேருக்கு ஆதார் கார்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நரிக்குறவர் குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை மாங்குடி எம்எல்ஏ வழங்கினார்.