

தமிழகத்தில் ஏற்பட்ட மழைவெள்ளம் காரணமாக 14 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறியுள்ளார்.
தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிலகங்களூக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா நேற்று சென்னை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மழைவெள்ளம் காரணமாக தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் குறு தொழில் நிறுவனங்கள், 3 ஆயிரம் சிறு தொழில் நிறுவனங்கள், ஆயிரம் நடுத்தர தொழில் நிறுவனங்கள் என 14 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இந்த தொழில் நிறுவனங்கள் மீண்டும் பழைய நிலையை அடைய சில மாதங்கள் ஆகலாம். இந்த நிறுவனங் களைச் சேர்ந்த பல்வேறு பிரதிநிதி கள் என்னிடம் அவர்களது தொழிற் கூடங்களுக்கு எந்தவிதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது? அரசிடமிருந்து என்னவிதமான உதவிகள் தேவை? என்பது குறித்து பல்வேறு விதமான கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
இந்த தொழில் நிறுவனங்களில் பெரும்பாலானவர்கள் வெள்ள பாதிப்புக்கு காப்பீடு செய்யவில்லை. இவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து நிதி அமைச்சகம் முடிவு செய்யும். நாளை (இன்று) மத்திய நிதி அமைச்சர் தமிழகம் வருகிறார். அவரிடம் பாதிக்கப்பட்ட அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் இழப்பீடு வழங்குவது குறித்து வலியுறுத்துவேன்.
பாதிப்புக்கு உள்ளான தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் தொழில் கடன் வழங்குவது மற்றும் ஏற்கெனவே பெற்றுள்ள கடன் தொகை மற்றும் வட்டி தொகையை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் மாநில அளவிலான வங்கிகளின் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தி வருகிறது. அவர்கள் அது குறித்து நல்ல முடிவை அறிவிப்பார்கள். தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிற் கூடங்களும் மீண்டும் வெற்றிகரமாக செயல்பட இந்த அரசு தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்.
தமிழகத்தில் வெள்ள பாதிப்பால் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பு குறித்து இன்னும் கணக்கீடு செய்யப்படவில்லை. மாநில அரசு இதுகுறித்து கணக்கீடு செய்து வருகிறது. அவர்கள் தெரிவிக்கும் கணக்கீட்டுக்குப் பிறகு மத்திய அரசு எத்தகைய நிவாரணம் வழங்குவது என முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.