

ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், கலவ குண்டா அணையில் இருந்து பொன்னை ஆற்றில் தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. இதையடுத்து, ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வேலூர் மாவட்ட வருவாய்த்துறை சார்பில் கிராமங்களில் தண்டோரா மூலம் எச்சரிக்கப்பட்டது.
தமிழக- ஆந்திர மாநில வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சித்தூர் மாவட்டத்தில் நீவா என்றழைக்கப்படும் பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கலவகுண்டா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக எந்த நேரத்திலும் அணை நிரம்பி உபரி நீர் வெளி யேறலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சித்தூர் மாவட்ட நீர்பாசனத்துறை அதிகாரிகள் கலவ குண்டா அணையில் இருந்து சுமார் 1,000 கன அடி வீதம் தண்ணீரை திறந்து விட்டுள்ளனர். அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தால் கூடுதலாகவும் தண்ணீரை திறக்கலாம் என்பதால் வேலூர் மாவட்ட பொதுப்பணித்துறை அதி காரிகளுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக எல்லையில் பொன்னையின் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. அதேநேரம் பொன்னை அணைக்கட்டின் வலதுபுறம் உள்ள ஒரு மதகின் இரும்பு கதவு ஏற்கெனவே சேதமடைந்து இருப்பதால், அதன் வழியாக ஆற்றில் தண்ணீர் வெளியேறி வருகிறது.
இரவு நேரத்தில் தண்ணீரின் அளவு அதிகரிக்கலாம் என்பதால் வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையில், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) பார்த்தீபன், பொன்னை ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ‘‘பொன்னை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் கிராம மக்கள் ஆற்றில் சென்று குளித்தல், இறங்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம்’’ என தண்டோரா மூலம் எச்சரித்து வருகின்றனர்.