திருச்சியில் ஆதரவற்ற சாலையோரவாசிகளுக்கு உணவு வழங்கும் திருநங்கையர் குழு

திருச்சி ஜோசப் கல்லூரி சாலையில் ஆதரவற்ற, வீடற்ற சாலையோரவாசிகளுக்கு இன்று உணவு வழங்கிய திருநங்கையர் குழுவினர்.
திருச்சி ஜோசப் கல்லூரி சாலையில் ஆதரவற்ற, வீடற்ற சாலையோரவாசிகளுக்கு இன்று உணவு வழங்கிய திருநங்கையர் குழுவினர்.
Updated on
1 min read

ஆதரவற்ற, வீடற்ற சாலையோரவாசிகள் 150 பேருக்கு, ஊரடங்கையொட்டி நாள்தோறும் உணவு வழங்கி வருகின்றனர் 6 பேர் அடங்கிய திருநங்கையர் குழுவினர்.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரியானா, நமீதா, உமா, பர்வீன், மாயா, ஸ்டெபி. திருநங்கையர்களான இவர்கள் 6 பேரும், ஆதரவற்ற, வீடற்ற சாலையோரவாசிகள் 150 பேருக்கு, ஊரடங்கையொட்டி நாள்தோறும் உணவு வழங்கி வருகின்றனர்.

இது குறித்து, ரியானா கூறுகையில், "எங்களைப் பார்த்து சாப்பிட்டாயா என்று கேட்பவர்கள் மிகவும் சொற்பம். இந்தநிலையில், ஆதரவற்ற நிலையில் சாலைகளில் சுற்றித்திரிவோரின் நிலை மிகவும் பரிதாபமானது. வழக்கமான நாட்களில் அவர்களுக்கு எப்படியாவது உணவு கிடைத்துவிடும்.

ஆனால், தளர்வற்ற ஊரடங்கு நாட்களில் உணவு கிடைப்பது மிகவும் கஷ்டம். இதையும், எங்களால் என்ன செய்ய முடியும் என்பதையும் யோசித்து கடந்தாண்டு ஊரடங்கின்போது உணவு வழங்கும் பணியைத் தொடங்கினோம்.

தொடர்ந்து, நிகழாண்டும் முழு ஊரடங்கு தொடங்கிய முதல் நாளில் இருந்தே உணவு வழங்கி வருகிறோம். 6 பேரும் ஒருங்கிணைந்து சமைத்து வாகனத்தில் எடுத்துச் சென்று, உணவு கிடைக்காதவர்களைக் கண்டறிந்து தினமும் வழங்கி வருகிறோம். சொந்த செலவில், எனது முகநூல் நண்பர்கள் செய்யும் உதவியுடன் நாங்கள் உதவி வருகிறோம்.

இந்தத் திட்டத்துக்காக உதவி செய்பவர்களுக்கு செலவழித்த விவரங்களை அனுப்பிவிடுகிறோம். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு உரிய அனுமதி பெற்று அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு பாதாம் பால், ரொட்டி வழங்கவுள்ளோம்" என்றார்.

இதனிடையே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் லெனின், இந்திய மாணவர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் மோகன்குமார் ஆகியோர் இவர்களது சேவையை அறிந்து இன்று நேரில் சென்று வாழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in