Last Updated : 06 Jun, 2021 07:05 PM

 

Published : 06 Jun 2021 07:05 PM
Last Updated : 06 Jun 2021 07:05 PM

கோவையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கிடைக்காமல் அவதி

கோவையில் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி பல நாட்கள் ஆகியும் அதற்குரிய சான்று கிடைக்காமல் 45 வயதுக்கு மேற்பட்ட பலர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் தற்போதுவரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மொத்தம் 5.23 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் மத்திய அரசின் ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்டவை.

இதுதவிர, 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கு மாநில அரசு சார்பில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பலருக்கு இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்று கிடைக்கவில்லை என, புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக, தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொதுமக்கள் சிலர் கூறும்போது, "தடுப்பூசி மையங்களில் ஆதார் எண், செல்போன் எண் ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொண்டனர். உடனடியாக விவரங்களை பதிவு செய்யவில்லை. ஓரிரு நாட்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான எஸ்எம்எஸ் வந்துவிடும் என எதிர்பார்த்தோம். இரண்டு வாரங்கள் கடந்தும் இன்னும் எஸ்எம்எஸ் வரவில்லை.

முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்று கிடைத்தால்தான் அதில் குறிப்பிட்டுள்ள தேதியை வைத்து, இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முடியும். கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசியை 4 முதல் 6 வாரங்களுக்குள்ளும், கோவிஷீல்ட் தடுப்பூசியை 12 முதல் 16 வாரங்களுக்குள் செலுத்திக்கொள்ள வேண்டும்.

கோவேக்சின் செலுத்திக்கொள்ள குறுகிய காலமே இருக்கிறது. ஆனால், இன்னும் சான்று வரவில்லை. எனவே, தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் விவரங்களை உடனடியாக பதிவேற்றம் செய்ய தனி கவனம் செலுத்தி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இது தொடர்பாக, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் கூறும்போது, "கோவையில் தடுப்பூசிக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. எனவே, தகவல்களை பதிவேற்றம் செய்யவதில் உள்ள பிரச்சினை விரைவில் சரிசெய்யப்படும்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அவை பதிவேற்றம் செய்தவுடன் எஸ்எம்எஸ் அனுப்பப்படும். இதில், கோவேக்சின் செலுத்திக்கொண்டவர்களின் விவரம் முதலில் பதிவு செய்யப்படும். அவர்கள் என்றைக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களோ, அதே தேதியில் சான்று கிடைத்துவிடும்" என்றார்.

கோவை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்பாண்டியன் கூறும்போது, "தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவரின் விவரங்களையும் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x