

நீலகிரியில் வசிக்கும் பழங்குடி மக்கள் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள் என்றால், இந்திய அளவில் பழங்குடியினருக்கு தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற பெருமை சேரும் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மருத்துவர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு நடத்த மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீலகிரி மாவட்டம் வந்தார்.
மசினகுடி, செம்மநத்தம் பழங்குடியின கிராமத்தில் இன்று (ஜூன் 06) பழங்குடியின மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முகாமினை தொடங்கி வைத்து பேசியதாவது:
"தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கக்கூடிய அனைத்து கிராமங்களிலும் அவர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
செம்மநத்தம் கிராமத்தை பொறுத்தவரை 177 பேர் உள்ளதாக கண்டறியப்பட்டு, அதில் 18 வயது நிரம்பியவர்கள் 152 பேர் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 27 ஆயிரத்து 32 பழங்குடியின மக்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 21 ஆயிரத்து 435 பேர். இவர்களில் இதுவரை 3,129 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். பழங்குடியின மக்களில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற நிலையை எட்ட வேண்டும்.
நீலகிரியில் வசிக்கும் பழங்குடி மக்கள் 100 சதவீதம் தடுப்பூசி போட்டு கொண்டார்கள் என்றால், இந்திய அளவில் பழங்குடியனருக்கு தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற பெருமை சேரும். இம்மாத இறுதிக்குள் பழங்குடியின மக்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி போட்டு கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதியிலும் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கைகள் எடுத்து வரக்கூடிய சூழலில், தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. தடுப்பூசிகள் வர வர அவை அனைத்து பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன. ஜூன் மாத இறுதிக்குகள் நமக்கு 37 லட்சம் தடுப்பூசிகள் வர வேண்டியுள்ளது.
நீலகிரி மாவட்டம் சிறிய மாவட்டமாக இருந்தாலும், கரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டு தன்னிறைவு கொண்ட மாவட்டமாக இருப்பதை ஆய்வில் பார்க்க முடிந்தது. உதகை அரசு மருத்துவமனையில் சென்னையில் இருந்து என்னென்ன அறிவிப்புகள் வெளியிடப்பட்டதோ, அனைத்தும் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய தன்னிறைவு பெற்ற மருத்துவமனையாக உதகை அரசு மருத்துவமனை உள்ளது. மாவட்டத்தில் உள்ள பிற மருத்துவமனைகளிலும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, பழங்குடியினருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தும் மாவட்டமாக மாற்ற வேண்டும். தொற்றும் இல்லாத மாவட்டமாக வந்தால் தமிழக முதல்வர் மகிழ்ச்சியடைவார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு 587 ஆக இருந்த தொற்று பாதிப்பு நேற்று 517 ஆக குறைந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தொற்று வேகமாக குறைந்து வருகிறது. 36 ஆயிரம் வரை சென்ற தொற்று பாதிப்பு நேற்றைய தினம் 21 ஆயிரத்து 410 என்ற அளவில் தான் பதிவானது. அதே நேரம், தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 472 ஆக உள்ளது. தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை காட்டிலும், குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதேபோல், நீலகிரி மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு குறைந்து தொற்றில்லாத மாவட்டமாக வரும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்தினால் நன்றாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வசதியை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி இன்று காலை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. படுக்கை வசதியுடன் ஒரு வாகனமும், கிராமம்தோறும் சென்று தடுப்பூசி செலுத்தும் வசதி கொண்ட வாகனமும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முகாமில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, கூடலூர் எம்எல்ஏ பொன்.ஜெயசீலன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், திமுக மாவட்ட செயலாளர் முபாரக் உட்பட பலர் பங்கேற்றனர்
தொடர்ந்து பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.