நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: இரா.முத்தரசன்

முத்தரசன்: கோப்புப்படம்
முத்தரசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஜூன் 05) வெளியிட்ட அறிக்கை:

"சிபிஎஸ்இ என்கிற மத்திய பாடத்திட்டத்தில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நடப்பாண்டு பொதுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. இதனை அறிவித்த பிரதமர் மோடி, 'மாணவர் உடல் நலன் மற்றும் உயிர் பாதுகாப்பில் ஒரு துளியும் சமரசம் செய்து கொள்ள முடியாது' என அறிவித்தார்.

இதனையொட்டி, பல மாநிலங்களிலும் 12ஆம் வகுப்புக்கான ஆண்டு பொதுத் தேர்வை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

உயர் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு நீட் தேர்வு உட்பட பல நுழைவு மற்றும் திறன் அறியும் தேர்வுகள் நடத்தும் சூழலில் தமிழ்நாடு மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பு பாதுகாக்கப்படுவது முன்னுரிமை பெற்றது.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்புக்கான அரசின் உயர் மட்டக்குழு என, பல்வேறு நிலைகளிலும் ஆலோசித்து, 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்து அறிவித்துள்ளதும், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கிட குழு அமைத்து பரிந்துரை கேட்டிருப்பதும் நல்ல அணுகுமுறையாகும்.

இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வு உட்பட உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கான அனைத்து விதமான நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என, மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம் எழுதி வலியுறுத்தி இருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்பதுடன், முதல்வர் கோரிக்கையை உடனடியாக ஏற்று, பொருத்தமான உத்தரவுகளை வெளியிடுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது".

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in