Published : 06 Jun 2021 01:45 PM
Last Updated : 06 Jun 2021 01:45 PM

கரூரில் கரோனா தடுப்பூசி செலுத்தாமல் டோக்கன் வழங்கியதால் ஏமாற்றம்

கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகம் முன் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான டோக்கன்களை முட்டி மோதிக்கொண்டு பெற்ற பொதுமக்கள்.

கரூர்

கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், தடுப்பூசி செலுத்தாமல் டோக்கன் மட்டும் வழங்கியதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கரூர் மாவட்டத்தில் இன்று (ஜூன் 06) கரூர் நகராட்சிப் பகுதியில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இனாம் கரூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், வெங்கமேடு கிழக்கு துணை சுகாதார நிலையம் மற்றும் தோட்டக்குறிச்சி சமுதாயக்கூடம் ஆகிய 5 இடங்களில் கரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில், மாவட்டநீதிமன்ற வளாகத்தில் 300, வெங்கமேடு கிழக்கு துணை சுகாதார நிலையத்தில் 100 மற்ற இடங்களில் தலா 200 என, மொத்தம் 1,000 தடுப்பூசிகள் போடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில், கரூர் நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து, அறியாமல் பொதுமக்கள் பலர் காலை முதலே நீதிமன்ற வளாக நுழைவுவாயில் முன் காத்திருக்க தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாகியது. இதில், முன்னதாக வந்த சிலர் நீதிமன்ற நுழைவுவாயிலை திறந்துகொண்டு உள்ளே சென்றுவிட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், தாந்தோணிமலை சப் இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் ஆகியோர் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி நிற்கவைத்தனர்.

அதன்பின், நீதிமன்ற வளாகத்திற்குள் நின்ற பொதுமக்களுக்கு டோக்கன் கொடுத்து வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்பின், நுழைவுவாயில் முன் நின்ற மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. வரிசையில் நின்ற மக்கள் முண்டியடித்துக்கொண்டு டோக்கன்களை பெற்றனர். தற்போது தடுப்பூசி இல்லாததால் நாளை (ஜூன் 07) இரவு தடுப்பூசி வந்தபின் ஜூன் 8, 9-ம் தேதிகளில் தடுப்பூசி போடப்படுவது குறித்து அறிவிக்கப்படும் எனக்கூறி அனுப்பிவைத்தனர்.

மேலும், டோக்கன் பெற்றவர்களுக்கு கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால், தடுப்பூசி போட்டுக்கொள்ள நீண்ட வரிசையில் வெகுநேரமாக நின்ற மக்கள் ஏமாற்றத்துடன் டோக்கன்களை பெற்றுக்கொண்டு திரும்பினர்.

டோக்கன் வழங்கல்

இது குறித்து, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சந்தோஷ்குமாரிடம் கேட்டபோது, "மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்துவதற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தன. இதையறியாமல் திரண்டதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுதிருப்பி அனுப்பப்பட்டனர். அடுத்து தடுப்பூசி வந்ததும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்" என்றார்.

பள்ளி முன் குவிந்த மக்கள்

கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன் காலை முதலே நூற்றுக்கணக்கான மக்கள் தடுப்பூசி போட நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதில், ஏற்கெனவே டோக்கன் வைத்திருந்த 100 பேர் மற்றும் புதிதாக வந்த 100 பேர் மட்டும் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால், அங்கு கூடியிருந்தவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலைந்து செல்ல மறுத்து அங்கேயே காத்திருந்தனர்.

இருப்பினும், மற்றவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. உள்ளே அனுமதிக்கப்பட்ட 200 பேருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து, தடுப்பூசி தற்போது கையிருப்பு இல்லை. அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும் என, அறிவிப்பு பதாகையில் எழுதப்பட்டது. இதனால், காத்திருந்தவர்கள் சிறிது நேரத்திற்கு பிறகு ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

கஸ்தூரிபாய் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

கரூர் கஸ்தூரிபாய் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது தடுப்பூசி போடும் பணி நடைபெறாத நிலையில், அங்கு தடுப்பூசிபோட வருபவர்கள் கவனத்திற்காக, தடுப்பூசி தற்போது கையிருப்பு இல்லை. மறு அறிவிப்பு வரும் வரைகாத்திருக்கவும் என, அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x