

உதகை அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோயளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் அமைந்துள்ள பகுதி மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மருத்துவர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீலகிரி மாவட்டத்துக்கு வந்துள்ளார்.
இன்று (ஜூன் 06) காலை உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவர்களிடம் கேட்றிந்தனர். பின்னர், உதகை அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மருத்துவக்கல்லூரி பணிகளை குறித்து விளக்கினார். ஆய்வின் போது, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உதகை எம்எல்ஏ ஆர்.க ணேஷ், உதகை அரசு மருத்துவக் கல்லூரி டீன் மனோகரி ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும், மசினகுடி அருகேயுள்ள செம்மநத்தம் பழங்குடியினர் கிராமத்தில் பழங்குடியினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்த பின்னர், கூடலூரில் கொக்காடு மற்றும் நிம்மினிவயல் பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தப்படுத்த பகுதிகளை ஆய்வு செய்கிறார்.
மதியம் உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.