

கோயில் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை கண்காணிக்க பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆணையர் ஜெ.குமரகுருபரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கரோனா பரவல் காரணமாக, கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர் உள்ளிட்ட பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு நிவாரண தொகையுடன் அரிசி மற்றும் 15 மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்குவதை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
சென்னையில் இருந்து இப்பொருட்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மொத்தமாக அனுப்பிவைக்கப்பட உள்ளன. தெரிவிக்கப்பட்டுள்ள அளவுகளில் இவற்றை ஒவ்வொருவருக்கும் பிரித்து வழங்க வேண்டியது அந்தந்த மாவட்ட அலுவலர்களான உதவி ஆணையர்களின் பொறுப்பாகும். மண்டல இணை ஆணையர்கள் இவற்றை கண்காணித்து அவ்வப்போது ஆணையருக்கும், உயர் அலுவலர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.
மாவட்டம்தோறும் அனுப்பி வைத்தல் மற்றும் மாவட்ட அலுவலர்களான உதவி ஆணையர்களால் அரிசி, மளிகைப் பொருட்களை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு பிரித்து அளித்தல் ஆகிய பணிகளை கண்காணிக்க மண்டல அளவில் இணை ஆணையர்கள் மற்றும் தலைமையிடத்தில் உயர் அலுவலர்களை பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது.
துறை அலுவலர்கள், பணியாளர்கள், செயல் அலுவலர்கள், களப்பணி ஆய்வர்கள், கோயில் பணியாளர்களை இப்பணியில் தேவைக்கேற்ப ஈடுபடுத்தி, நிவாரண உதவிகள் சம்பந்தப்பட்ட பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.