

தமிழகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாம்களில் அனைத்துயானைகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
உதகையில் நேற்று அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 13 ஆசிய சிங்கங்களுக்கு கரோனா அறிகுறிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சில சிங்கங்களுக்கு அறிகுறிகள் தென்பட்ட நிலையில், நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் உயிரிழந்தது. இதேபோன்ற நிகழ்வுகள் ஹைதராபாத், ஜெய்ப்பூர், உத்தரப்பிரதேச மாநிலம் இட்டாவா ஆகிய இடங்களில் உள்ள ஆசிய சிங்கங்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
பூங்கா அதிகாரிகளால் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, தமிழ்நாடு கால்நடைமருத்துவப் பல்கலைக்கழகத்தினருடன் கலந்தாலோசிக்கப்பட்டது. நோயுற்ற சிங்கங்களை குணப்படுத்தும் வகையில், நோய் எதிர்ப்புமருந்துகள், தொற்றுக்கேற்ப சிகிச்சையும் வழங்கப்பட்டது. சிங்கங்களின் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, தேசிய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள போபாலில் உள்ள ‘ஐசிஏஆர்-நிஷாத்’ என்ற ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.
மேலும், தமிழ்நாடு கால்நடைமருத்துவப் பல்கலைக்கழகம், மருத்துவ வல்லுநர்களை பூங்காவின் கால்நடை மருத்துவர்களுக்கு உதவ அனுப்பியுள்ளது.
இக்குழுவானது, பூங்காவில்உள்ள இதர விலங்குகளுக்குகரோனா தொற்று பரவாமல் பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விலங்குகளைக் கையாளும் பணியாளர்களுக்கு உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள விலங்குகளின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தேசிய அளவில் உள்ள துறை நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் துறையின் அலுவலர்கள் கலந்தாலோசனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், முதுமலை, டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாம்களில் உள்ள யானைகளுக்கு கரோனா பரிசோதனை செய்யவும், யானைகளை கண்காணிக்கவும் வனத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.