Last Updated : 06 Jun, 2021 03:12 AM

 

Published : 06 Jun 2021 03:12 AM
Last Updated : 06 Jun 2021 03:12 AM

இயற்கை சார்ந்த உணவு பழக்கத்துக்கு மாறும் குரங்குகள்: வாழ்வியல் சூழலை பாதுகாக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை

ஆழியாறு வனப்பகுதியில் மரங்களில் உள்ள பழங்களைப் பறித்து உட்கொள்ளும் நாட்டுக்குரங்கு.

பொள்ளாச்சி

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வெண்மந்தி, கருமந்தி, நாட்டுக் குரங்கு, சிங்கவால் குரங்கு, தேவாங்கு ஆகிய 5 வகை குரங்கு இனங்கள் உள்ளன. ஆழியாறில் இருந்து வால்பாறை வரையுள்ள வனப்பகுதியில், ஆழியாறில் வெண்மந்தி, நாட்டுக்குரங்கும், வாட்டர்பால்ஸ் பகுதியில் கருமந்தி, புதுத்தோட்டம் பகுதியில் சிங்கவால் குரங்கும், அடர்ந்த வனப்பகுதியில் தேவாங்கும் காணப்படுகின்றன. கவியருவி பகுதிக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் கொடுக்கும் காரம், உப்பு சுவை மிகுந்த நொறுக்குத் தீனிகளை தின்று பழகிய நாட்டுக்குரங்குகள், அதன் இயற்கை உணவான ஆல், அரசு, அத்தி, இச்சி மரங்களின் இலை, துளிர், பூ, காய், பழம் ஆகியவற்றை முற்றிலும் மறந்தன. செயற்கை உணவினை விரும்பிய குரங்குகள், கவியருவி பகுதியில் சாலையோரங்களில் நிரந்தரமாகவே முகாமிட்டிருந்தன. அவ்வப்போது வாகனங்களில் அடிபட்டு குரங்குகள் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறின.

இந்நிலையில், கரோனா முழு ஊரடங்கு காலத்தால், கவியருவிக்குச்செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இவர்களுக்காக காத்திருந்து ஏமாந்துபோன குரங்குகள், படிப்படியாக இயற்கை உணவுப் பழக்கத்துக்கு மாறியுள்ளன. கடந்த 10 நாட்களுக்கு மேலாக சாலையோரங்களில் குரங்குகள் காணப்படவில்லை.

ஊரடங்கு காலத்தில் குரங்குகள் உணவின்றித் தவிப்பதாக நினைத்து, கவியருவி வழியே செல்லும் பொதுமக்கள் சிலர், பிஸ்கெட், மிக்சர், முறுக்கு, கேக் மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றை குரங்குகளுக்கு வழங்குகின்றனர். இதனால் செயற்கை உணவுப் பழக்கவழக்கத்துக்கு குரங்குகள் மீண்டும் மாறும் அபாயம் உள்ளதாக, வன ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வனஆர்வலர் அரவிந்த் ராம் கூறும்போது, ‘‘மனிதன் உட்கொள்ளும் உணவுகளை காட்டு உயிரினங்களுக்கு கொடுத்து பழக்கும்போது, அதன் உடலில் வழக்கமாக நடைபெறும் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். தோல், கல்லீரல் பாதிக்கப்படும். குறிப்பாக உப்பு, காரம் மிகுந்த நொறுக்குத் தீனிகளை உட்கொள்ளும் குரங்குகளுக்கு, கோடை காலத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையின்போது சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. காட்டு உயிரினங்களுக்கு தீமை தரக்கூடிய உணவுகளை அளிப்பது வன உயிரின (பாதுகாப்பு) சட்டம் 1972-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x