Published : 06 Jun 2021 03:12 AM
Last Updated : 06 Jun 2021 03:12 AM

ஊரடங்கு கெடுபிடிகளால் அதிகரிக்கும் வனம் சார்ந்த குற்றங்கள்: ‘ட்ரோன்’ மூலம் கண்காணிக்கும் வனத்துறை

கரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தருமபுரி மாவட்ட வனப்பகுதிகளில் நுழைவோரை தடுக்கும் வகையில் வனத்துறையினர் ‘ட்ரோன்’ கேமரா மூலம் கண்காணிப்புப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

கரோனா தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தருமபுரி மாவட்டம் உட்பட தமிழகம் முழுக்க மாநில அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. அத்தியாவசிய காரணங்களை தவிர்த்து இதர காரணங்களுக்காக வெளியில் வருவோர் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களைச் சேர்ந்த பலர் வனத்துக்குள் நுழையத் தொடங்கியுள்ளனர். கள்ளத் தனமாக விற்கப்படும் இடங்களில் மது வாங்கிக் கொள்ளும் குழுவினர் வனத்துக்குள் நுழைந்து மது அருந்துகின்றனர். சிலர் வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கத்துடன் உள்ளே நுழைகின்றனர். மேலும் சிலர் வனத்துக்குள் நுழைந்து மரங்களை வெட்டும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். ஒருசில இடங்களில் சாராயம் காய்ச்சும் நோக்கத்துடனும் சிலர் வனத்துக்குள் நுழைகின்றனர். இவ்வாறான வனக் குற்றங்களை தடுக்கும் வகையிலும், வனத்துக்குள் குழுவாக நுழைபவர்களில் ஒருவரிடம் இருந்து இதர நபர்களுக்கு கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையிலும் வனத்துறையினர் தற்போது கண்காணிப்புப் பணியை அதிகரித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், காரிமங்கலம் என 7 வட்டங்களிலும் வனப்பகுதி உள்ளது.

குறிப்பாக மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 36 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது. எனவே, ஒவ்வொரு வனச் சரகத்திலும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளுமாறும், சுழற்சி முறையில் வனப்பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளுமாறும் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவிட்டார்.

அதன்படி, வனச் சரகர்கள் தலைமையிலான வனத்துறையினர் கடந்த சில நாட்களாக தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 வாரங்களில் வனக் குற்றங்களில் ஈடுபட்டதாக 15-க்கும் மேற்பட்டவர்கள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவும் செய்துள்ளனர். நேற்று தருமபுரி மாவட்டம் அரூர், மொரப்பூர் வனச் சரகங்களில் ட்ரோன் கேமரா பறக்க விடப்பட்டு வனப்பகுதி கண்காணிக்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி வனச் சரகர்கள் கிருஷ்ணன், சிவக்குமார் ஆகியோர் கூறும்போது, ‘தருமபுரி மாவட்ட வனப்பரப்பில் மான், காட்டுப்பன்றி, மயில், முயல், உடும்பு, நரி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசிக்கின்றன.

அவை வனத்துக்குள் அதிக அளவில் நடமாடும் நீர்நிலைப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கிறோம். இதுதவிர, இரவு, பகலாக வனப்பகுதியில் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளோம். வனக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

மாவட்டத்தில் ஏற்கெனவே வனப்பகுதி ரோந்துப் பணிக்கு 12 குழுக்கள் உள்ள நிலையில் கூடுதலாக 3 குழுக்கள் அமைக்கப்பட்டு 15 குழுக்கள் மாவட்டத்திலுள்ள வனப்பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x