

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் விவசாயிகள் நேற்று வேளாண் சட்ட நகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதராக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் போராடுகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், சட்ட நகல்களை எரித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பல்வேறு இடங்களில் வீடுகளின் முன் இப்போராட்டம் நடைபெற்றது. சில இடங்களில் அஞ்சல் நிலையங்கள் முன்பு போராட்டங்கள் நடைபெற்றன.
தாம்பரம் அஞ்சல் நிலையம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் பெ.சண்முகம் தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செங்கல்பட்டு தலைமை அஞ்சல் நிலையம் முன்பும் நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் செங்கல்பட்டு பகுதி குழுச் செயலர் கே.வேலன், மாவட்டச் செயலர் இ.சங்கர், நிர்வாகிகள் வாசுதேவன், அரிகிஷ்ணன், அன்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் நத்தப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலர் கே.நேரு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் சங்கர், நிர்வாகிகள் சாரங்கன், பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர், பெரியபாளையம், கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சட்ட நகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் போலீஸார் சட்ட நகலை எரிப்பதை தடுத்து நிறுத்தினர். இந்தப் போராட்டடத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சம்பத், செயலர் துளசி நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் வேளாண் சட்ட நகல்களை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.