

பொங்கல் பண்டிகையை ஒட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஜனவரி 8 முதல் 17-ம் தேதி வரை பொங்கல் சிறப்பு சந்தை நடைபெற உள்ளது. மேலும் பொங்கலை ஒட்டி காய்கறி, பழம் மற்றும் பூ மார்க்கெட்டுகளுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வருவர். சரக்குகளும் அதிக அளவில் வாகனங்களில் கொண்டுவரப்படும். இதை கருத்தில் கொண்டு கோயம்பேடு மார்கெட்டில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் வேகமாக சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கனமழையால் சாலை எண்.3 முதல் 18 வரையிலான சாலைகள் சேதமடைந்துள்ளன. பொங்கலையொட்டி அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் வர இருப்பதை கருத்தில் கொண்டு, சிஎம்டிஏ அறிவுறுத்தலின் படி ரூ.10 லட்சம் செலவில் சாலை சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது என்றார்.