

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 31-ம் தேதி காலை, 10.30 மணிக்கு சென்னையில் நடக்கும் என கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் அறிவித்துள்ளதாவது:
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 31-ம் தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னையில் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடக்கும்.
கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப் படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வந்து பங்கேற்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினர்களாக சுமார் 2 ஆயிரம் பேரும், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக 250 பேரும் உள்ளனர். கடந்தாண்டு அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம், டிசம்பர் 21-ம் தேதி, வானகரத் தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத் தில் நடந்தது. கடந்த பல ஆண்டு களாகவே இந்த இடத்தில்தான் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தாண்டுக்கான கூட்டம் நடக்கும் இடம் அறிவிக்கப்படவில்லை.
இது தொடர்பாக, அதிமுக வட்டாரத்தினர் கூறும்போது, ‘‘இந் தாண்டு, திருவான்மியூரில் தனியா ருக்கு சொந்தமான இடம் உட்பட பல இடங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. இதில் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும். இக்கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பை பொதுச் செயலாளர் வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம். மேலும், வெள்ள சேதம் தொடர்பான மத்திய அரசின் நிதியை பெற வலியுறுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்’’ என்றனர்.