

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்குப்பின் இவ்வாண்டு ஜூன் முதல் வாரத்தில் பாபநாசம் உள்ளிட்ட அணைகளில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சாகுபடி பணிகளை மேற்கொண்டு, ஐப்பசி மாத மழைக்கு முன் அறுவடை செய்துவிட முடியும் என்று, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித் தனர். ஆனால், தண்ணீர் திறப்பால் மட்டுமே இது சாத்தியமில்லை, விவசாய பணிகள் மற்றும் இடுபொருட்களுக்கான செலவு களுக்கு விவசாய கடன் வழங்கி அரசு உதவ வேண்டும் என்றும், விவசாய பிரதிநிதிகள் வலியுறுத்து கின்றனர்.
கால்வாய்களில் தண்ணீர்
மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு, வடக்குபச்சையாறு அணைகளில் இருந்து கார் சாகுபடிக்கு தற்போது 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் அந்தந்த பகுதி கால்வாய்களிலும் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி வடக்குகோடை மேலழகியான் கால்வாயில் 54 கனஅடி, தெற்கு கோடை மேலழகியான் கால்வாயில் 26 கனஅடி, நதியுண்ணி கால்வாயில் 69 கனஅடி, கன்னடியன் கால்வாயில் 250 கனஅடி, கோடகன் கால்வாயில் 50 கனஅடி, பாளையங்கால்வாயில் 142 கனஅடி, திருநெல்வேலி கால்வாயில் 100 கனஅடி, மருதூர் மேலக்கால்வாயில் 170 கனஅடி, மருதூர் கீழக்கால்வாயில் 156 கனஅடி, திருவைகுண்டம் தெற்கு பிரதான கால்வாயில் 196 கனஅடி, வடக்கு பிரதான கால்வாயில் 195 கனஅடி, மணிமுத்தாறு பெருங்காலில் 75 கனஅடி என்ற அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப் பணித்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிகள் தயக்கம்
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கிய கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஓரிரு இடங்களில் கார் சாகுபடிக்காக விளைநிலத்தை பண்படுத்துதல், நாற்று பாவுதல் போன்ற ஆயத்த பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பெரும்பாலான இடங்களில் சாகுபடி பணிகளை விவசாயிகள் இன்னமும் தொடங்கவில்லை. விவசாய பணிகளுக்கு செலவிட பலரிடம் பணம் இல்லை என்பதால், அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள் ளதாக விவசாய பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
முதற்கட்டமாக சாகுபடி பணியை மேற்கொள்ள 1 ஏக்கருக்கு அடிப் படை செலவாக ரூ. 10 ஆயிரம் தேவைப்படுகிறது. மொத்தமாக 1 ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்து முடிக்க ரூ.25 ஆயிரம் வரையில் செலவாகும். இதை கணக்கிட்டு விவசாயிகளுக்கு தேவையான கடனை வழங்க அரசுத்துறைகள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கையிருப்பு ஏதுமில்லை
இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பி.பெரும்படையார் கூறியதாவது:
கரோனா ஊரடங்கால் கையிலி ருந்த பணத்தை செலவழித்துவிட்ட விவசாயிகளிடம் கையிருப்பு எதுவுமில்லை. ஏற்கெனவே நகைகளை அடகுவைத்து கடன் பெற்றுள்ள விவசாயிகள், அதை திருப்பி செலுத்த முடியவில்லை. கடந்த அதிமுக ஆட்சியின்போது விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு செய்யப்பட்டது. அவ்வாறு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை தற்போது உறுதி செய்து, புதிய கடன்களை வழங்க இப்போது பொறுப்பேற்றுள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். இதை துரிதப்படுத்தி உடனடியாக விவசாயிகளுக்கு கடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
சாகுபடி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வேறுபடும். எனவே, விவசாயிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்டங்களில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் கார் சாகுபடியை இந்த பருவத்தில் சரியாக தொடங்கிவிட்டால் அடுத்துவரும் பிசான சாகுபடியும் தொடர்ந்து நடைபெறும். இந்த இரு பருவ சாகுபடியையும் விவசாயிகள் முழுமையாக மேற்கொண்டு மகசூல் பெற்றால், அவர்களும் பயனடைவர் என்றார் அவர்.