

குறுகிய காலத்தில் தன்னார்வலர்கள், மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மதுக்கரை அரசு மருத்துவமனையில் 60 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கோவை, மதுக்கரையில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தாலுக்கா அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டது. 30 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். கரோனா தொற்றுப் பரவல் கோவையில் அதிகமானதைத் தொடர்ந்து, ஆக்சிஜன் படுக்கைகளுக்கான தேவை அதிகரித்தது.
இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் இரு படுக்கைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் வசதி இருந்தது. அதைத் தொடர்ந்து, ஏற்கெனவே இருந்த படுக்கைகளுடன் கூடுதலாக 30 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு, தற்போது அனைத்துப் படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கண்ணன் மகாராஜ் கூறியதாவது:
"மருத்துவமனையைத் தரம் உயர்த்த தன்னார்வலர்கள், மாவட்ட நிர்வாகம் சார்பில் துரிதமாக உதவிகள் கிடைத்தன. மருத்துவமனையில் 6 நிரந்தர மருத்துவர்கள், 8 செவிலியர்கள், ஒரு ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர் பணியாற்றி வந்தோம்.
தற்போது கூடுதலாக தன்னார்வ அமைப்பு மூலம் ஒரு ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர், 4 மருத்துவர்கள், 12 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, மொத்தம் 10 மருத்துவர்கள், 20 செவிலியர்கள் 3 ஷிப்ட்கள் அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தற்போது ஒரு நோயாளியை மூன்று முறை மருத்துவர்கள் கவனிக்க முடிகிறது. மருத்துவமனையைத் தூய்மையாக வைத்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் மூலம் 10 தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிலிண்டர்கள் மூலம் அளிக்கப்படும் ஆக்சிஜனில் பற்றாக்குறை ஏற்பட்டால், அதைச் சமாளிக்க அரசு சார்பில் 40 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளும், தன்னார்வலர்கள் மூலம் 10 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளும் அளிக்கப்பட்டுள்ளன.
நோயாளிகள் குளிக்கத் தண்ணீரைச் சூடாக்கும் இயந்திரங்கள், தூய்மையான குடிநீர் வழங்க இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. சத்தான உணவு வழங்கப்படுகிறது. தொற்று உறுதியாகி இங்கு வருபவர்களில் மிதமான பாதிப்பு உள்ளவர்களைப் பரிசோதித்து நாங்களே ஆம்புலன்ஸ் மூலம் தற்காலிக சிகிச்சை மையங்களுக்கு அனுப்பிவைக்கிறோம்.
ஆக்சிஜன் அளவு 95-க்குக் கீழ் உள்ளவர்களை இங்கு அனுமதிக்கிறோம். எனவே, மதுக்கரையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்".
இவ்வாறு தலைமை மருத்துவர் கண்ணன் மகாராஜ் கூறினார்.