Published : 05 Jun 2021 07:25 PM
Last Updated : 05 Jun 2021 07:25 PM

சிங்கங்களைப் பாதுகாக்க நடவடிக்கை: தலைமை வனப் பாதுகாவலர் உயிரியல் பூங்காவில் நேரில் ஆய்வு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்கள் குறித்து தலைமை வனப் பாதுகாவலர் நேரில் ஆய்வு செய்து வழிகாட்டுதல்களை வழங்கினார்.

சிங்கங்களின் உடல்நிலை குறித்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

''இன்று தமிழ்நாடு வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் யுவராஜ், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு நேரில் வந்து களத் தணிக்கை செய்து சிங்கங்களின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவருடன் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் தெபாஷிஸ் ஜானா மற்றும் துணை இயக்குநர், கால்நடை மருத்துவர்கள் உடனிருந்தனர்.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தற்சமயம் 12 சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஹைதராபாத், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது என வந்த செய்தியைத் தொடர்ந்து தமிழக அரசு மற்றும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் வழிகாட்டுதலின்படி வன உயிரினங்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சில சிங்கங்களின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதால் அனைத்து சிங்கங்களின் மாதிரிகளைச் சேகரித்து மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள நோய்களைக் கண்டறியும் தேசிய நிறுவன ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் 9 சிங்கங்களுக்கு சார்ஸ் கோவிட்-2 நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அவற்றில் 9 வயது உடைய நீலா என்ற பெண் சிங்கம் ஜூன் 3ஆம் தேதி உயிரிழந்தது.

அனைத்து சிங்கங்களையும் தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழக மருத்துவர் குழு பேராசிரியர் (ம) துறைத் தலைவர் (வன உயிரினம்), ஸ்ரீகுமார், கால்நடை மருத்துவ உதவிப் பேராசிரியர் பரணிதரன் (இன்டர்னல் மெடிசின் துறை), பேராசிரியர் கால்நடை மருத்துவர் தயா சேகர், உதவி கால்நடை மருத்துவர் ஸ்ரீதர் ஆகியோரால் சிங்கங்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் யுவராஜ், மத்திய ஆணையம் வழங்கிய பின்பற்ற வேண்டிய சிகிச்சை நெறிமுறைகளை அண்ணா உயிரியல் பூங்காவில் பின்பற்றும்படி அறிவுறுத்தினார். அதேபோல் தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புப் பணிகள் வழங்கிய வழிகாட்டுதலின்படி விலங்கு காப்பாளர் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x