

கருப்புப் பூஞ்சை நோயைத் தடுக்க அனைத்து மாநிலங்களுக்கும் போதிய மருந்துகள் அனுப்ப வேண்டுமென மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
கோவில்பட்டிக்கு வந்த கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறும்போது, கோவில்பட்டி கோவிட் கேர் சென்டரில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கருப்புப் பூஞ்சை தடுப்பு மருந்துகள் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
மற்ற நாடுகளைவிட இந்தியாவில் தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அதனைத் தடுப்பதற்கான வழிவகைகளை மத்திய அரசு செய்ய வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் போதிய அளவு மருந்துகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரே நாடு, ஒரு ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வருவதற்கு முன்பாக தமிழகத்தில் பொது விநியோக திட்டம் திருப்திகரமாக இருந்தது.
அதனால் தமிழகத்தில் இருந்து பாடம் மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பொருட்கள், தொடர்ந்து கிடைப்பதற்கான பொது விநியோக திட்டம் எப்போதுமே தமிழகத்தில் சிறப்பாக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழகத்துக்கு அதிகமாக தடுப்பூசிகள் அனுப்ப வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு அதிகமான மக்கள் தடுப்பூசி போடுவதற்கு முன் ந்துள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில் தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கக்கூடாது. அதற்கு மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும், என்றார் அவர்.
பின்னர், இலங்கை அம்பாதோட்டை துறைமுகத்தில் சீனா குத்தகைக்கு எடுத்துள்ளதால், தமிழக கடல் எல்லையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, அடுத்த நாட்டில் நடைபெறக்கூடிய விஷயங்களில் தலையிடுவதற்கு ஒரு மாநில அரசால் நிச்சயமாக முடியாது.
ஆனால் அதன் காரணமாக தமிழகத்துக்கு எந்த ஒரு பாதிப்பு இருந்தாலும் நிச்சயமாக மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்மை பாதுகாப்பதற்கான அத்தனை வழிமுறைகளையும் செய்வார், என பதில் அளித்தார்.