திருவாரூர் அருகே எடகீழையூரில் மீண்டும் நேரடி நெல் கொள்முதல் நிலையம்: விவசாயிகள் கோரிக்கை

எடகீழையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாத நிலையில், விவசாயிகள் தங்களது அறுவடை நெல்லை நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்துக் காத்துக் கிடக்கின்றனர்.
எடகீழையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாத நிலையில், விவசாயிகள் தங்களது அறுவடை நெல்லை நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்துக் காத்துக் கிடக்கின்றனர்.
Updated on
1 min read

எடகீழையூர் கிராமத்தில் மீண்டும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே எடமேலையூர், காரக்கோட்டை, வடுவூர், எடகீழையூர் உள்ளிட்ட பல கிராமங்களில் கோடை குறுவை நடவுப் பணிகள் முடிந்து தற்போது அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன.

எடகீழையூர் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்தது. இதனால் இப்பகுதி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை, இக்கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டுவந்து கொள்முதல் நிலையத்தில் போட்டுப் பயனடைந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகக் கோடை குறுவை அறுவடை முடிந்த விவசாயிகள், தங்களது நெல்லை எடகீழையூர் கிராமத்தில் இயங்கி வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டுவந்தனர். அப்போது அங்கிருந்த கொள்முதல் நிலைய அதிகாரி, எடகீழையூர் கிராமத்தில் இயங்கி வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார்.

இதனால் விவசாயிகள் தேவையற்ற அலைக்கழிப்புக்கு ஆளாகி உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால், விவசாயிகள் அறுவடை செய்து கொட்டி வைத்துள்ள நெல்மணிகள் நனையத் தொடங்கியுள்ளன. இன்னும் சில நாட்கள் வெயில் இன்றி மழை தொடர்ந்து பெய்தால், நேரடி நெல் கொள்முதல் வளாகத்தில் திறந்த வெளியில் வைத்துள்ள 10 ஆயிரம் மூட்டை நெல்மணிகள் முளைக்கத் தொடங்கிவிடுமோ என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து டிஎன்சிஎஸ்சி பணியாளர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் இளவரி கூறும்போது, ''அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எடகீழையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

30க்கும் மேற்பட்ட விவசாயிகளின் சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள், நேரடி நெல் கொள்முதல் வாயிலிலேயே கிடக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த பிறகும்கூடத் திறக்கப்படவில்லை. பருவநிலை மாற்றத்தின் காரணமாக மழை பெய்வதால் நெல் மூட்டைகள் மழையில் நனைய வாய்ப்பு அதிகம் இருக்கிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in