Published : 05 Jun 2021 05:53 PM
Last Updated : 05 Jun 2021 05:53 PM

மீன் வியாபாரிகள் ஒரு வாரத்துக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி ஆணையர்

தமிழக அரசால், ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், காசிமேடு மற்றும் சிந்தாதிரிபேட்டை மீன் அங்காடி வளாகங்களில் மீன் மொத்த விற்பனை தொடங்குவது குறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஜூன் 05) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் ஊரடங்கு 14.6.2021 வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மீன் விற்பனை வளாகங்கள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் மொத்த வியாபாரத்திற்காக மட்டும் செயல்பட அனுமதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ராயபுரம் மண்டலம் சிந்தாதிரிபேட்டை மீன் அங்காடி வளாகம் மொத்த மீன் விற்பனைக்காக மட்டும் திறக்கப்படும்போது அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய கோவிட் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது உடன் இருந்த காவல் துறை அலுவலர்கள் மற்றும் மீன் வியாபார சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து, அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைத் தவறாமல் அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும், பின்பற்றத் தவறும் பட்சத்தில் அத்தகைய வியாபாரிகளுக்கு விற்பனை மேற்கொள்ளத் தடை விதிக்கப்படும் எனவும் ஆணையர் தெரிவித்தார்,

தொடர்ந்து வார்டு 62, சிங்கன்னா தெருவில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமில் சிந்தாதிரிபேட்டை மீன் அங்காடி வியாபாரிகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுவதை மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மீன் வியாபாரிகளிடம் சிந்தாதிரிபேட்டை மீன் வளாக அங்காடிகளுக்கு வரும் வியாபாரிகள் அனைவரும் அடுத்த ஒரு வார காலத்திற்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, தண்டையார்பேட்டை மண்டலம், காசிமேடு மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி மொத்த மீன் வியாபாரம் தொடங்கவுள்ள நிலையில், ககன்தீப் சிங் பேடி, காவல்துறை, மீன்வளத்துறை மற்றும் மீன் விற்பனை அங்காடி பிரதிநிதிகளுடன் இன்று நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, காசிமேடு மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி, மொத்த மீன் வியாபாரத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மீன்பிடி வளாகம் திறக்கப்படும்போது அங்கு பின்பற்றப்பட வேண்டிய கோவிட் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும், மீனவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது குறித்தும், ஆணையர், மீன்வளத் துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் மற்றும் மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

இந்த மீன்பிடி வளாகத்தில் மொத்த மீன் விற்பனை செய்ய ஏதுவாக தனிமனித இடைவெளியுடன் விற்பனை அங்காடிகளை அமைக்கவும், மேலும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆணையர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, ஆணையர் காசிமேடு மீன்பிடித் துறைமுக வளாகத்தில், அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி சிறப்பு முகாமைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காசிமேடு மீன்பிடி வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கு வார்டு 42 மற்றும் 43-ல் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி தடுப்பூசி முகாம்கள் மூலம் இதுவரை 12,052 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

காசிமேடு மீன்பிடித் துறைமுக வளாகத்தில், இன்று அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி சிறப்பு முகாமில், 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். இன்று மாலை 3.00 மணியளவில் இந்த முகாமில் சுமார் 410 நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

காசிமேடு மீன்பிடி வளாகத்திற்கு வருகை தரும் மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் இந்தத் தடுப்பூசி சிறப்பு முகாம் வாயிலாக உடனடியாகத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என, ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x