Published : 05 Jun 2021 05:38 PM
Last Updated : 05 Jun 2021 05:38 PM

தாய்மையைக் கண்டுணர்ந்து வியந்து வணங்குகிறேன்: முதல்வர் குறித்து ஆ.ராசா உருக்கம்

முதல்வர் ஸ்டாலின் - ஆ.ராசா: கோப்புப்படம்

சென்னை

தாய்மையைத் தங்களிடம் கண்டுணர்ந்து வியந்து வணங்குகிறேன் என, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆ.ராசா நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ஆ.ராசா எம்.பி. முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று (ஜூன் 05) எழுதிய கடிதம்:

"நாடும் ஏடும் போற்றும் வணக்கத்திற்குரிய தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு,

வணக்கம். 'நன்றி' என்பது பெற்றுக்கொண்டவர் வெளிப்படுத்த வேண்டிய உணர்ச்சியே தவிர, செய்தவர் பெருமைபட்டுக்கொள்ள அல்ல என்ற பெரியாரின் வாழ்வியல் நெறி என் சிந்தனையுள் பரவுவதால் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

'தாய்க்குப் பின் தாரம்' என்ற வழக்குமொழி எவ்வளவு வலிமையானது என்பதை நான் உணர்கிற இந்நேரத்தில் உங்களின் பேரன்பு என்னை உருகலின் உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது.

அண்ணா குறிப்பிட்டதைப் போல, 'அனைவரையும் ஓரன்னை பெற்றெடுக்க வயிறு தாங்கா காரணத்தால், தனித்தனித் தாய் ஈன்றெடுத்த தம்பிகள் நாம்' என்ற பாச இழைகளால் கட்டப்பட்டதுதான் திமுக என்பதை நான் அறிவேன்.

அதைக் கடமையாய்க் கொண்டு உணர்ச்சியோடு தொடர்ந்து கட்டமைத்து திமுகவைக் காத்தவர் கருணாநிதி. 2ஜி அலைக்கற்றை வழக்கில் நான் சிக்குண்ட போது, 'பனிக்குடத்தில் வைத்து என்னைக் காப்பாற்றிய தாய், தலைவர் கருணாநிதி' என்று நான் அப்போது பதிவு செய்திருந்தேன் என்பதை அறிவீர்கள்.

அந்தத் தாய் இன்று இல்லாமல் போனாலும் அதே தாய்மையை தங்களிடம் கண்டுணர்ந்து வியந்து உங்களை வணங்குகிறேன்.

என் அருமை துணைவியார் பரமேஸ்வரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் பெற்ற நாள் முதல், தாங்கள் அவர் உடல்நலம் மீளக் காட்டிய அக்கறையும் அன்பும் நம்மிருவருக்குமான தனிப்பட்ட உணர்வாய் இல்லாமல், ஒரு குடும்பத் தலைவனுக்கே இருக்க வேண்டிய பாச உணர்ச்சியும் கடமை உணர்ச்சியும் பின்னிப் பின்னி ஜடை போட்டுக்கொள்கிற நிகழ்வாய் கூட தன் அன்பால், கருணையால், பரோபகாரத்தால் ஆட்கொண்டு மானுடம் போற்றும் மகத்துவம் தங்களின் ஆளுமை என்றுணர்ந்து என் சோகத்திலும் இனம்புரியாத சுகம் கொள்கிறேன்.

ரேலா மருத்துவமனைக்கே வந்து மருத்துவர்களுடன் அமர்ந்து என் துணைவிக்கு அளிக்கப்படும் சிகிச்சையை வரையறுத்து வழிநடத்திட, தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள், நோய்வாய்ப்பட்ட என் துணைவிக்கு மட்டுமல்ல, நொறுங்கிக் கிடந்த, என் இருதயத்திற்கும் மருந்தாக அமைந்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு காலன் என் துணைவியின் விலாசத்தைத் தெரிந்துகொண்டான் என்ற தகவல் முதல்வரான உங்கள் கவனத்திற்கு எனக்கு முன்பே உளவுத்துறை சொல்லியிருக்க வேண்டும். மதிய உணவை ஒத்திவைத்துவிட்டு, அண்ணியாரோடும், தம்பி உதயநிதி, மாப்பிள்ளை சபரீசன் ஆகியோரோடும் மருத்துவமனைக்கு வந்து பாசத்தையும், உணர்ச்சியையும் சற்றே தளர்த்திக் கொண்டு பெரியார் சொன்ன 'இயற்கையின் கோணல் புத்தி'யை எனக்கும் என் அருமை மகள் மயூரிக்கும் எடுத்துச் சொல்லி, எங்களின் கரம் பற்றி, தோள் தட்டி ஆறுதல் சொன்னீர்கள்.

என் துணைவியின் இறுதி மூச்சு வலியின்றிப் போக வேண்டுமென்று நானும் என் மகளும் மருத்துவமனையில் கலங்கி, காத்துக் கிடந்தபோது, என்னோடு இருந்த தம்பி உதயநிதியிடம் நீங்கள் அதையே விசாரித்துக் கொண்டிருந்தீர்கள்.

மாலை 7.05-க்கு அவளின் கடைசி இயக்கம் நின்றுபோனது என்று அறிந்து நாங்கள் கதறி அடங்கிய சிறிது நேரத்தில், நீங்கள் தம்பி உதயநிதியைத் தொலைபேசியில் அழைத்து அளித்த அறிவுரையை அருகில் இருந்த என்னால் கேட்க முடிந்தது.

கரோனா காலத்தில் கூட்டம் சேரக் கூடாது என்ற அக்கறை ஒரு முதல்வருக்கு இருக்கும் என்றாலும், தம்பி உதயநிதியை என் துணைவியின் உடல் அடக்கம் செய்யப்படவிருந்த கிராமத்திற்கே சென்று வர அனுமதித்துப் பணித்தீர்கள்.

திமுக எனும் மாபெரும் இயக்கத்தின் ஒரு சிறு துளியாய், கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய உடன்பிறப்புகளில் ஒருவனாய், உங்களின் சகோதரனாய் நான் அறியப்பட்டதால், என் துணைவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள், காவல்துறையினர், எல்லாவற்றுக்கும் மேலாக, ஊரடங்கு அமலில் இருக்கும் போதும் எண்ணிலடங்கா திமுக உடன்பிறப்புகள், எனப் பல்லாயிரம் பேர் வந்து எனக்கும் என் மகளுக்கும் என் குடும்பத்தாருக்கும் ஆறுதல் அளித்தனர்.

துணைவியின் மரணத்திற்குப் பிறகு வெறிச்சோடிப் போன என் இதயத்தில் உங்களின் அன்பும் அரவணைப்பும் நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்கின்றன. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இறை சிந்தனை கொண்ட மணாளனும் மகளும் மட்டுமே உலகம் என்று தன் வாழ்க்கையை சுருக்கிக்கொண்ட என் துணைவியாரின் உடல் நல்லடக்கத்தில் கூட எந்த சடங்கையும் அனுமதிக்காத பகுத்தறிவாளன் நான். என்றாலும், உங்களின் அன்பும் அரவணைப்பும் எடுத்துக்கொண்ட தொடர் அக்கறையும் என்னைத் திருவாசகத்தின் பக்கம் திருப்புகின்றன; தக்க வரிகளுக்காக!

வேண்டத்தக்கது அறிவோய் நீ;

வேண்ட முழுதும் தருவோய் நீ

நன்றியுடன் வணங்குகிறேன்".

இவ்வாறு ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x