

கிராம மக்களுக்குக் குடிநீர் கிடைக்க உதவி கோரி வந்த மின்னஞ்சலைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த தலைமை நீதிபதி அமர்வு, குடிநீர் கிடைப்பது அடிப்படை உரிமை. உடனடியாகக் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தண்டு மாரியம்மன் கோவில், அம்மனி பழனியப்பா முதலி தெரு, காட்டு வேலாயுத முதலி தெரு ஆகியவற்றின் சந்திப்பில் 350 மீட்டர் நீளத்திற்கு குடிநீர் குழாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்த சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டுமென்ற கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மே 24ஆம் தேதி உதவி கேட்டு மின்னஞ்சல் வந்தது.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் மூலம் குடிநீர் கிடைப்பதில்லை என அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சல் புகாரை, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கரோனா பேரிடர் நேரத்தில் குடிநீர் இல்லாமல் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை மீறிய செயல் எனத் தெரிவித்த தலைமை நீதிபதி, குடிநீர் வசதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். குடிநீர் கிடைக்காவிட்டால் அதைக் கிடைக்கச் செய்ய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும்படி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.