

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஏற்படுத்த வேண்டிய மருத்துவ கட்டமைப்புகள் ஆகியவை குறித்து, தமிழக தலைமைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 05) ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வெ.இறையன்பு பேசும்போது, "கரோனா தொற்றுக்குள்ளானவர்களை அவர்கள் சார்ந்த பகுதிகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்றிலிருந்து ஒவ்வொருவரையும் காக்கும் கேடயமாக தடுப்பூசிகள் விளங்குவதால் மக்களிடத்தில் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அத்தியாவசிய காரணங்கள் தவிர பிற காரணங்களுக்கு வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொற்று பரவல் முற்றிலும் குறைந்து தொற்றில்லா தமிழகம் என்ற நிலையை இலக்காக கொண்டு அனைத்து அலுவலர்களும் பணியாற்ற வேண்டும்" என்றார்.
இந்த ஆய்வு கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுதுறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கான கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களான நியமிக்கப்பட்டுள்ள வணிகவரித்துறை ஆணையர் எம்.ஏ.சித்திக், வேலைவாய்ப்புத்துறை இயக்குநர் வீரராகவராவ், நகர்புற ஊரமைப்புத்துறை இயக்குநர் பி.கணேஷன், பொதுத்துறை செயலாளர் டி.ஜகநாதன், கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ர.சுதாகர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வநாகரத்தினம், கோவை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்பாண்டியன், பொது சுகாதாரம் மற்றும் மருந்துதடுப்பு இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, கொடிசியா 'ஏ' அரங்கில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன்கூடிய படுக்கைகள் வசதிகளை வெ.இறையன்பு நேரில் பார்வையிட்டார்.