Published : 05 Jun 2021 04:17 PM
Last Updated : 05 Jun 2021 04:17 PM

ஓசூரில் நடமாடும் காய்கறி வாகன விற்பனை: வேளாண் வணிகத்துறை அலுவலர் ஆய்வு

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் இயங்கி வரும் நடமாடும் காய்கறி மற்றும் பழ வகைகள் வாகன விற்பனையை வேளாண் வணிகத்துறையின் கீழ் இயங்கும் உழவர் சந்தையின் நிர்வாக அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா ஊரடங்கு எதிரொலியாக ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் வசிக்கும் மக்களின் வீடுகளின் அருகே காய்கறி மற்றும் பழ வகைகள் கிடைக்கும் வகையில் வேளாண் வணிகத்துறை சார்பில் நடமாடும் காய்கறி மற்றும் பழவகைகள் வாகனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஓசூர் மாநகராட்சியில் ஒரு வார்டுக்கு 2 வாகனங்கள் என 90 வாகனங்களில் உழவர் சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள விவசாயிகள் மூலமாக நடமாடும் காய்கறி மற்றும் பழவகைகள் விற்கப்படுகின்றன.

இதில் காய்கறிகள் 45 வாகனங்களிலும், பழவகைகள் 45 வாகனங்களிலும் என மொத்தம் 90 வாகனங்களின் முகப்பில் ஒலிப்பெருக்கி கட்டப்பட்டுள்ளது. அதன் மூலமாக விற்பனைக்கு உள்ள காய்கறி மற்றும் பழங்களின் பெயர்களை அறிவித்தபடி குடியிருப்புப் பகுதிகளில் வாகனங்கள் வலம் வந்தபடி விற்பனை நடைபெறுகிறது.

இந்த நடமாடும் காய்கறி மற்றும் பழவகைகள் விற்பனை வாகனங்களில் கடைப்பிடிக்கப்படும் கரோனா விதிமுறைகள் மற்றும் பொருட்களின் விலை குறித்து உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சுமிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடமாடும் வாகன விற்பனையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கட்டாயம் முகக்கவசம் அணியவும், கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளைச் சுத்தப்படுத்தவும், தவறாமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் விவசாயிகளிடம் வலியுறுத்தினார்.

மேலும் நிர்ணயிக்கப்பட்ட விலையில்தான் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார். கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அவர்களது அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்தார். இந்த ஆய்வின்போது உதவி வேளாண்மை அலுவலர் சிவானந்தம் உடனிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x