பணியில் இருந்து கொண்டே ஒரே நேரத்தில் இரு படிப்பை முடித்த ஆசிரியைக்கு பதவி உயர்வு கிடையாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

பணியில் இருந்து கொண்டே ஒரே நேரத்தில் இரு படிப்பை முடித்த ஆசிரியைக்கு பதவி உயர்வு கிடையாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

பணியில் தொடர்ந்தவாறு ஒரே நேரத்தில் பி.எட். மற்றும் முதுநிலை ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பை முடித்த ஆசிரியைக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர், தனக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அவர் மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததால், அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் இடைநிலை ஆசிரியராக 1986-ல் பணியில் சேர்ந்துள்ளார். 1988-ல் இளங் கலை ஆங்கில இலக்கியம் முடித்துள்ளார். பின்னர் 1989-ல் ஓராண்டு பி.எட். மற்றும் 1990-ல் இரண்டாண்டு முதுகலை ஆங்கில இலக்கியம் முடித்துள்ளார். இவ் விரண்டு படிப்புகளையும் அவர் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டே படித்துள்ளார். இது எப்படி முடிந்தது என்பது தெரியவில்லை. பொதுவாக பணியில் இருக்கும் ஒருவரால் ஒரு படிப்புக்கே நேரம் ஒதுக்க முடியாது. இவர் இரு படிப்புகளை படித்துள்ளார். அந்த கல்வி தரமானதாக இருக்குமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

பணியில் இருந்துகொண்டே ஒரே நேரத்தில் இரு படிப்புகளை முடித்த காரணத்தால் மனுதாரருக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்து பள்ளிக் கல்வி இயக்குநர் கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து மனுதாரர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிட்டதில் தவறில்லை. மேலும் மனுதாரர் யுஜிசி நிபுணர் குழுவின் தீர்மானத்தையும் மீறியுள்ளார்.

எனவே கூடுதல் கல்வித் தகுதி அடிப்படையில் தனக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரிய மனுதாரர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in