

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என, பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என, மத்திய அரசு 2015-ம் ஆண்டு அறிவித்தது. மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, 2019, ஜன. 27 அன்று பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதனிடையே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ரவீந்திரநாத் எம்.பி., மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் திமுக இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தது. தற்போதையை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், எய்ம்ஸ் மருத்துவமனை என, ஒற்றை செங்கல்லைக் காண்பித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என, பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 05) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"மதுரையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்குவதற்காக 27-1-2019 அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இம்மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டு, சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கான நிலம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில், இவ்விடத்தில் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென்றும், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்குப் பணிகளைச் செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டுமென்றும் கோரி, பிரதமருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.