Published : 05 Jun 2021 12:53 PM
Last Updated : 05 Jun 2021 12:53 PM

சிங்கங்களுக்கு கரோனா பாதிப்பு; விசாரணை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல் 

சென்னை

சென்னை அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம் ஒன்று உயிரிழந்த நிலையில், 9 சிங்கங்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறித்து விரிவான விசாரணை தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 9 ஆசிய சிங்கங்களுக்கு கோவிட் - 19 அறிகுறிகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சில சிங்கங்களுக்கு அறிகுறிகள் தென்பட்டதுடன் நீலா என்ற 9 வயதுள்ள பெண் சிங்கம் நேற்று மாலை உயிரிழந்தது.

ஹைதராபாத், ஜெய்பூர், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள இட்டாவா ஆகிய இடங்களில் உள்ள ஆசிய சிங்கங்களுக்கும், கானுலா நடைபெறும் பூங்காக்களில் உள்ள சிங்கங்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அனைத்து ஆசிய சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டன. பூங்கா அதிகாரிகளால் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தினரைக் கலந்தாலோசித்து நோயுற்ற சிங்கங்களை குணப்படுத்தும் பொருட்டு நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் இதர மருந்துகள் வழங்கப்பட்டன. தொற்றுக்கேற்ப மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.

சிங்கங்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இந்திய தேசிய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

''வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், ஒரு சிங்கம் உயிரிழந்துவிட்டதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சிங்கங்களிடமிருந்து பிற விலங்குகளுக்கும் தொற்று பரவாமல் தடுக்க வேண்டும்!

வண்டலூர் உயிரியல் பூங்கா பல வாரங்களாக மூடப்பட்டிருக்கிறது. பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. பயிற்சியாளர்களும், உணவு வழங்கும் பராமரிப்புக் குழுவினரும் மட்டுமே விலங்குகளை நெருங்க முடியும் எனும் நிலையில் அவற்றுக்குத் தொற்று எவ்வாறு ஏற்பட்டது?

விலங்குகளைப் பராமரிக்கும் குழுவினருக்கு கரோனா ஆய்வு செய்யப்பட்டதா? தடுப்பூசிகள் போடப்பட்டனவா? அவர்கள் மூலமாக சிங்கங்களுக்கு கரோனா பரவியிருக்கலாமா? என்பது குறித்து விசாரணை தேவை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x