

சூழல் மண்டல மறுசீரமைப்பு மாபெரும் பலன்களை அளிக்கக் கூடியது ஆகும். வேளாண் காடுகளை மறு உருவாக்குவதன் மூலம் 130 கோடி பேருக்கான உணவு உத்தரவாதத்தை உறுதி செய்ய முடியும். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 2030ஆம் ஆண்டிற்குள் குறைக்க வேண்டிய கரியமில வாயு அளவில் மூன்றில் ஒரு பங்கு குறைப்பைச் சாதிக்க முடியும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் 5ஆம் நாளான இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் நிலை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. கிட்டத்தட்ட அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டிய நிலையில் உள்ள சுற்றுச்சூழலைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாவிட்டால் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதைக்கு பதிலாக வீழ்ச்சிப் பாதையில் பயணிக்க நேரிடும்.
உலகம் முழுவதும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் நாள் உலகச் சுற்றுச்சூழல் நாளாகக் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டிற்கான உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ‘சூழல்மண்டல மறு உருவாக்கம்’ (Ecosystem Restoration) என்பதை ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்வைத்துள்ளது. இந்த முழக்கமும், அதன் நோக்கமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இயற்கைக்கு அவசர உதவி தேவைப்படுகிறது. புவி வெப்பமடைதலால் உருவாகியுள்ள காலநிலை அவசரநிலை; இயற்கைவள அழிவினால் உருவாகியுள்ள உயிர்ச்சூழல் அவசரநிலை; அதிகரித்துவரும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியன உடனடியாகப் போக்கப்பட வேண்டும். இவை அனைத்தையும் தடுத்து ஒரு உன்னதமான எதிர்காலத்தை அடுத்த பத்தாண்டுகளுக்குள் உருவாக்குவது சாத்தியம்தான்.
அதற்கான ஆற்றலும் அறிவு வளமும் இன்றைய உலகில் உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து அனைத்து மட்டத்திலும் தீவிரமாகச் செயல்படுவதுதான் பூவுலகைக் காப்பதற்கான உடனடித் தேவையாகும்.
சூழல் மண்டலங்கள் உயிர் வாழ்வின் ஆதாரம். சூழல் மண்டலங்கள் நலமாக இருந்தால் பூவுலகும் அதன் மக்களும் நலமாக வாழ்வர். எனவே சூழல் மண்டலங்களின் மறு உருவாக்கத்திற்கான பத்தாண்டுகள் (UN Decade on Ecosystem Restoration 2021 - 2030) எனும் பிரச்சாரத்தை இந்த நாளில் ஐ.நா. தொடங்குகிறது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால், அது மட்டும் போதாது... அழிக்கப்பட்ட இயற்கை வளங்களை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பது இப்பரப்புரையின் நோக்கம்.
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல், உயிரி பன்மய வளத்தைப் பாதுகாத்தல், மனித உடல்நலத்தைக் காப்பாற்றுதல் ஆகிய அனைத்திற்கும் சூழல் மண்டலங்களை மறு உருவாக்குவது இன்றியமையாத தேவையாகும். காடுகளையும், உயிரிப்பன்மய வளத்தையும் சீரழித்ததன் விளைவாகவே கரோனா பெருந்தொற்று உருவானது என்பதைக் கவனத்தில் கொண்டால் சூழல் மண்டலங்களின் முக்கியத்துவம் புரியும்.
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கரியமில வாயு அளவை 2030ஆம் ஆண்டுக்குள் பாதியளவாகக் குறைப்பதற்கு பாரிஸ் உடன்படிக்கையில் உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. ஐநா நீடித்திருக்கும் வளர்ச்சி இலக்குகளின் கீழ் 17 குறிக்கோள்களை 2030-க்குள் எட்ட உலக நாடுகள் உறுதி ஏற்றுள்ளன. ‘சூழல்மண்டல மறு உருவாக்கம்’ இந்த இலக்குகளை அடைவதற்கான சிறந்த வழியாகும்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள், அவ்விடத்தில் உள்ள உயிரற்ற பொருட்களுடன் ஒன்றுக்கொன்று இயற்கையாகவே தொடர்பு கொண்டு இருப்பதை சூழல் மண்டலம் என்கிறோம். இது இயற்கை அமைப்பில் வாழும் உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்துப் பொருட்களையும் உள்ளடக்கியுள்ளது. ஒரு பெரிய காடும் சூழல் மண்டலம்தான். ஒரு சிறிய குளமும் சூழல் மண்டலம்தான். மனித வாழ்க்கைக்குத் தேவையான நீர், உணவு உள்ளிட்ட அனைத்தையும் இவையே தருகின்றன.
ஐக்கிய நாடுகள் அவையானது சூழல் மண்டலங்களை விளைநிலங்கள், காடுகள், ஏரிகளும் ஆறுகளும், புல்வெளிகள், மலைகள், கடல்களும் கடலோரப் பகுதிகளும், கரிநிலங்கள், நகரப்பகுதிகள் என எட்டு வகையாக வகைப்படுத்தியுள்ளது. ‘‘அனைத்து சூழல் மண்டலங்களும் மனித செயல்களால் மிக மோசமாக சீரழிக்கப்பட்டுள்ளன. 1992ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகில் 42 கோடி ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
இதனால் 175 கோடி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மொத்த விளைநிலங்களில் 20% உற்பத்தித் திறனை இழந்துள்ளது. இதனால் 12% உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 66% கடல்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மூன்றில் ஒரு பங்கு மீன்வளம் பாதிப்பைச் சந்தித்துள்ளது. 2000-ஆவது ஆண்டுக்குப் பின் நகர மக்களில் 50% பேருக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை’’- என்கிறது சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு ஐநா வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கை.
சூழல் மண்டல மறுசீரமைப்பு மாபெரும் பலன்களை அளிக்கக் கூடியது ஆகும். வேளாண் காடுகளை மறு உருவாக்குவதன் மூலம் 130 கோடி பேருக்கான உணவு உத்திரவாதத்தை உறுதி செய்ய முடியும். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 2030ஆம் ஆண்டிற்குள் குறைக்க வேண்டிய கரியமில வாயு அளவில் மூன்றில் ஒரு பங்கு குறைப்பைச் சாதிக்க முடியும். உலகெங்கும் அழிந்துவரும் உயிரின வகைகளில் 60 விழுக்காட்டினை அழியாமல் காப்பாற்ற முடியும். இவையெல்லாம சூழல் மண்டலங்களை மறு உருவாக்குவதன் மூலம் மனித குலத்திற்குக் கிடைக்கக் கூடிய மாபெரும் பலன்களில் ஒரு சில ஆகும்.
‘சூழல்மண்டல மறு உருவாக்கம்’ எனும் இலக்கினை தமிழ்நாட்டில் முதன்மை நோக்கமாகச் செயல்படுத்த வேண்டும். விழிப்புணர்வை உருவாக்குதல், தமிழ்நாட்டின் அனைத்து வகை சூழல் மண்டலங்களையும் பாதுகாத்தல், சீரழிந்த நிலையில் உள்ளவற்றை மறுசீரமைத்தல் ஆகிய பணிகளைத் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, தமிழ்நாட்டின் நீர்வள மாசுபாட்டினையும் அழிவினையும் தடுத்து அவற்றை மறு உருவாக்கம் செய்ய வேண்டும்.
தமிழக நகரப் பகுதிகளைப் பசுமை நகரங்களாக மாற்ற வேண்டும். கடலோரப் பகுதிகளை மீளமைக்க வேண்டும். விளைநிலங்கள் அழிவைத் தடுத்து சீர் செய்ய வேண்டும். காடுகளைக் காப்பாற்றி பசுமைப் பகுதிகளை அதிகமாக்க வேண்டும். இவ்வாறாக அனைத்து சூழல் மண்டலங்களையும் மறுசீரமைக்க இந்த சுற்றுச்சூழல் நாளில் நாம் உறுதியேற்போம்”.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.