Published : 05 Jun 2021 12:01 PM
Last Updated : 05 Jun 2021 12:01 PM

கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை தீ விபத்து: பச்சிளங்குழந்தைகளை காப்பாற்றிய செவிலியருக்கு முதல்வர் பாராட்டு

சென்னை

கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தின் போது பச்சிளங்குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிர்களை காப்பாற்றிய செவிலியர் ஜெயக்குமாரை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:

“சென்னை, திருவல்லிக்கேணி, கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் கடந்த 26.5.2021 அன்று இரவு மின்கசிவு ஏற்பட்டு திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. அந்த அறையில் 36 பச்சிளங்குழந்தைகள் இன்குபேட்டரிலும் மற்றும் 11 குழந்தைகளுடன் தாய்மார்களும், என 47 நபர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கு பணியில் இருந்த செவிலியர் ஜெயக்குமார் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, தீ அணைப்பான்களை கொண்டு தீயை அணைத்தார். தீயணைப்புப் படைவீரர்கள் வரும் முன்னே, துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிர்களை பத்திரமாக காப்பாற்றினார்.

இந்நிகழ்வு குறித்து அறிந்த முதல்வர் ஸ்டாலின், செவிலியர் ஜெயக்குமாரை இன்று (5.6.2021) முகாம் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, அவரது செயலைப் பாராட்டி, சிறப்பு செய்தார்.

இந்தச் சந்திப்பின்போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், செவிலியர் ஜெயக்குமார், அவர்களின் மனைவி செவிலியர் தேவிகா மற்றும் அவரது குழந்தைகள் உடனிருந்தனர்”.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x