Published : 05 Jun 2021 03:11 AM
Last Updated : 05 Jun 2021 03:11 AM

சர்வாதிகாரமாக நடக்கின்றன சமூக வலைதள நிறுவனங்கள்: ‘சோஹோ’ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சிறப்புப் பேட்டி

சமூக வலைதள நிறுவனங்கள், ஓடிடி தளங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ‘புதிய ஒழுங்குமுறை விதிகள்’ கடும் சர்ச்சையாகி உள்ளன. அவ்விதிகளை எதிர்த்து வாட்ஸ்அப், கூகுள் போன்ற நிறுவனங்கள் நீதிமன்றம் சென்றுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாகவும், கரோனா சூழல் காரணமாககடந்த ஓராண்டு காலமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருப்பது, தொழில் நிறுவனங்களின் இயங்குமுறை பெரும் மாறுதலுக்கு உள்ளாகியிருப்பது ஆகியவை தொடர்பாகவும் ‘சோஹோ’ நிறுவனத்தின் நிறுவனரும், தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான ஸ்ரீதர் வேம்பு உடன் உரையாடியதிலிருந்து...

தற்போது எழுந்திருக்கும் பிரச்சினை வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற தனி நிறுவனங்களின் தகவல் பாதுகாப்புக் கொள்கை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, மக்களின் அந்தரங்கம் சம்பந்தப்பட்டதும் கூட! தனி மனிதரின் அந்தரங்கத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தும் விதியை நாம் நிறுவனங்களின் விதிகளாக குறுக்கி, நிறுவனங்கள் அரசின் விதிக்கு கட்டுப்பட்டுதான் நடக்க வேண்டும் என்று கூறுவது சரியா? இந்த விவகாரத்தை அரசுக்கும் சமூக வலைதள நிறுவனங்களுக்கும் இடையிலான பிரச்னை என்று நாம் அணுகுவதாகத் தோன்றுகிறது. இது மக்களின் உரிமை சார்ந்த பிரச்சினை இல்லையா?

கரோனா வைரஸ் சீனாவின் வூகான் ஆய்வகத்திலிருந்து வெளியேறியது என்று சென்ற ஆண்டில் யாரவது பதிவிட்டாலே, அந்தப் பதிவை டிவிட்டர் நிறுவனம் உடனடியாக நீக்கியது. ஆனால், தற்போது கரோனா வைரஸ் இயற்கையாக உருவாகவில்லை, அது ஆய்வகத்தில்தான் உருவாக்கப்பட்டு வெளியே பரவியிருக்கிறது என்பதற்கான சான்றுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. எனில், சென்ற ஆண்டு எதன் அடிப்படையில் அத்தகையப் பதிவுகளை டிவிட்டர் நீக்கியது? மக்கள் எதைப் பேச வேண்டும் எதைப் பேசக்கூடாது என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை அந்நிறுவனங்களுக்கு யார் வழங்கியது? டிரம்பை ஒருவருக்கு பிடிக்கிறதோ இல்லையோ... அவர் 47 சதவீதம் வாக்குகள் பெற்று இருக்கிறார். ஆனால், அவருடைய கணக்கை டிவிட்டர், பேஸ்புக் நிறுவனங்கள் முடக்கியுள்ளன. இவ்வாறு சர்வாதிகாரப் போக்கைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள், மக்களின் கருத்துரிமையைப் பாதுகாப்பதாக சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஆமாம், இது மக்களின் அந்தரங்க உரிமை சார்ந்த பிரச்சினைதான். ஆனால், மக்கள் சார்ந்து அரசுக்குப் பொறுப்பு இருக்கிறது. நிறுவனங்களுக்கு அப்படி எந்தப் பொறுப்பும் இல்லை. அப்படி இருக்கையில், தன் நாட்டில் இயங்கும் நிறுவனங்கள் தங்கள் விதிக்கு கட்டுப்பட்டுதான் இயங்க வேண்டும் என்று ஒரு நாட்டின் அரசு கூறுவதில் என்ன தவறு இருக்கிறது?

இந்திய இறையாண்மைக்கு, ஒருமைப்பாட்டுக்கு, பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயல்பாடுகளைத் தடுக்கவும், விசாரிக்கவும், தண்டனை வழங்கவும் இந்த விதிகள் கொண்டுவரப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது. இதில் பிரச்சினை என்னவென்றால், எந்தச் செயல்பாடுகள. எல்லாம் இறையாண்மைக்கு, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதுதான். மத்திய அரசின் போக்கை விமர்சிப்பவர்களை தேசத் துரோகிகளாகவும், அவர்களது செயல்பாடுகளை தேச விரோத செயல்பாடுகளாவும் அணுகும் போக்கு சமீபமாக அதிகரித்து இருக்கிறது. இந்தப் பின்புலத்தில் பார்க்கும்போது, தற்போது முவைக்கப்படும் 'புதிய ஒழுங்குமுறை விதிகள்' சந்தேகத்துகுரியதாக மாறுகின்றனவே...

அரசு தவறு இழைக்கும்போது அதற்கு எதிர்வினையாற்றும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில், மேற்கு வங்கத்தில், கேரளாவில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் தாங்கள் நம்பும் கட்சியை தேர்வு செய்திருக்கிறார்கள். இக்கட்சிகள் மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிரான கருத்தியலைக்கொண்ட கட்சிகள்தான். அரசியலமைப்பு ரீதியாக நமக்கு ஜனநாயக உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது இருக்கிறது. அதனால் ஒரு அளவுக்கு மேல் எந்த அரசும் எல்லை மீறி செயல்பட்டுவிட முடியாது. ஆனால், சமூக வலைதள மற்றும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அப்படி இல்லை. அவை முற்றிலுமான சர்வாதிகாரத் தன்மையை கொண்டிருக்கின்றன. அவை விதிவரம்பற்று செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ஓரிரு வருடங்களுக்கு முன்பு, ஆப்பிள் நிறுவனத்துக்கும் அமெரிக்கா புலனாய்வு அமைப்பான எஃப்பிஐக்கும் இடையே மோதல் ஒன்று ஏற்பட்டது. எஃப்பிஐ ஒரு குற்றவாளியைத் தேடிக்கொண்டிந்த சமயத்தில் அந்தக் குற்றவாளியின் ஐபோன் அவர்களிடம் கிடைத்தது. அந்தக் குற்றவாளியின் செயல்பாடுகள் தொடர்பான தகவலைப் பெறுவதற்காக அந்த ஐபோனை ஊடுறுவிப் பார்ப்பதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் உதவியை எஃப்பிஐ கோரியது. பயனாளர்களின் அந்தரங்கத்தைப் பாதுகாப்பது எங்கள் கடமை என்று கூறி ஆப்பிள் எஃப்பிஐ-க்கு உதவ மறுத்தது. எஃப்பிஐ ஆப்பிளை நீதிமன்றத்துக்கு இழுத்தது.

அதுவே, இந்தியாவில் அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் அதை நாம் அரசியல் பிரச்சினையாக மாற்றிவிடுவோம். சிங்கப்பூர் அரசானது அந்நாட்டு விதிகளுக்கு உட்பட மறுக்கும் நிறுவனங்களை உடனடியாக வெளியேற்றிவிடுகிறது. அமெரிக்கா மட்டுமல்ல... இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, என பல நாடுகள், சமூக வலைதள நிறுவனங்களின் சர்வாதிகாரப் போக்கை கட்டுப்படுத்தும் முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன. எனவே, இந்த விவகாரத்தை நாம் அரசியல் பின்புலத்தில் அணுகாமல் பரந்த தளத்தில் அணுக வேண்டும்.

இன்னொரு விசயத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இணையம் அறிமுகமாகி 28 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், தற்போதுதான் அதன் பயன்பாடு மிகப் பெரும் அளவில் அதிகரித்து இருக்கிறது. இதுவரையில், இணையப் பயன்பாடு சார்ந்து சட்ட ரீதியான விதிமுறைகளை பெரிய அளவில் உருவாக்கப்படவில்லை. தற்போது இணையம் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்ட நிலையில், அது தொடர்பான திட்டவட்டமான விதிமுறைகள் அவசியமாகின்றன. அதற்கான பயணம்தான் இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

'கூ' போன்ற இந்தியச் செயலிகள் டிவிட்டருக்கு மாற்றாக முன்வைக்கப்பட்டன. டிவிட்டர், பேஸ்புக் போன்றவை உலகளாவிய அளவில் தொடர்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளைத் தருகின்றன. ஆனால், இந்திய சமூக வலைதள செயலிகள் பிராந்திய எல்லைக்குள் சுருங்கி விடுவதாக உள்ளன. இல்லையா?

அடுத்த ஐந்து வருடங்களில் இந்தச் சூழல் மாறலாம். எப்படி ஜிமெயிலுக்கு யாகூ, அவுட்லுக் போன்றவற்றிலிருந்து மின்னஞ்சல் அனுப்பமுடியுமோ... அதுபோல ‘கூ’ மாதிரியான இந்தியச் செயலிகளிலிருந்தும் வாட்ஸப், டெலிகிராம் போன்ற செயலிகளுக்கும் தகவல்களை அனுப்பும் வகையில் பாலங்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது. பணப் பரிவர்த்தனையை எளிதாக்கிய யுபிஐ (UPI) தொழில்நுட்பம் மிகச் சிறந்த உதாரணம். அமெரிக்காவிலேயே இப்படி ஒரு பேமெண்ட் சிஸ்டம் கிடையாது. ஆனால், இந்தியா யுபிஐ தொழில்நுட்பத்தை வெற்றிகரமானதாக மாற்றியிருக்கிறது.

நாம் தற்போது எதிர்கொண்டிருக்கும் காலகட்டத்தை ‘தொழில்நுட்ப பிரபுத்துவம்’ (Techno-feudalism) என்று வரையறுக்கிறார்கள். பெரு தொழில்நுட்ப நிறுவனங்களே உலகின் போக்கை தீர்மானிக்ககூடியதாகவும், அரசை விட பலம் பொருந்தியதாகவும் மாறிவருகின்றன. அதேசமயம், வட கொரியா, சீனா போன்ற நாடுகளில், அந்நாட்டு அரசுக்கு கைப்பாவையாக அந்நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த முரணை எப்படி புரிந்துகொள்ளவது?

கூகுள், பேஸ்புக், அமேசான் போன்ற பெரும் நிறுவனங்கள், சந்தைகளை முழுமையாக கைப்பற்றி வருகின்றன. இந்தப் போக்கு நீடித்தால் அது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று எல்லா நாடுகளும் உணரத்தொடங்கியுள்ளன. இந்நிறுவனங்களின் எதேச்சதிகார போக்கைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் சிந்தித்து வருகின்றன. கூடவே, தற்போது உலகம் உலகமயமாக்கலுக்கு எதிர்திசையில் (de-globalization) பயணப்படத் தொடங்கியிருக்கிறது. எல்லா நாடுகளும் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. அந்த வகையில் இனி இணையப் பயன்பாடு சார்ந்து புதிய தர நிலைகள் உருவாகும். தற்போதைக்கு புதிய தர நிலைகளின் வழியே மட்டுமே இந்தச் சூழலை எதிர்கொள்ள முடியும்.

லாபத்தை முதன்மை நோக்கமாக கொள்ளாமல், சமூக மேம்பாட்டை அடிநாதமாக கொண்டு செயல்படும் நிறுவனம் உங்கள் சோஹோ. பெரும்பாலான நிறுவனங்கள் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களை மையப்படுத்தி இயங்கி வருகையில், சோஹோ தென்காசியை நோக்கி நகர்ந்தது. சோஹோவின் இருப்பு அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

தென்காசி அருகில் உள்ள மத்தளம்பாறையில் 2011ம் ஆண்டு சோஹோ அலுவலகம் திறக்கப்பட்டபோது ஆறு ஊழியர்கள்தான் இருந்தார்கள். இப்போது அந்த அலுவலகத்தில் 500 பேர் பணிபுரிகின்றனர். கல்லூரி முடித்துவிட்டு வேலைக்காக சொந்த ஊரைப் பிரிந்து பெரு நகரங்களை நோக்கிப் போக வேண்டியதாக நமது வேலைவாய்ப்புக் கட்டமைப்பு இருக்கிறது. அந்த வகையில், தென்காசியில் சோஹோ நிறுவனம் அமைக்கப்பட்டிருப்பதானது அப்பகுதியைச் சுற்றி இருக்கும் இளைஞர்களுக்கு, முக்கியமாக பெண்களுக்கு பெரிய பொருளாதார வாய்ப்பை வழங்கியிருக்கிறது. சென்னை மாதிரி பெரு நகரங்களுக்குச் சென்று, ஊதியத்தில் பெரும்பகுதியை வீட்டு வாடகைக்கென்று கொடுத்து குடும்பத்தைப் பிரிந்து அவசர வாழ்க்கை வாழ்வதற்குப் பதிலாக, இங்குள்ள இளைஞர்கள் தங்கள் குடும்பத்துடனே இருந்து நிதானமான வாழ்க்கையை வாழும் சூழலை சோஹோ ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

இவையெல்லாம்போக, மாற்றுக் கல்வி முறையை அறிமுகப்படுத்தி, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தந்திருக்கிறது. தென்காசிக்கு மாவட்ட அந்தஸ்து கிடைத்த்தற்கு, அங்கு சோஹோ அமைந்திருப்பதும் ஒரு காரணம்.

கரோனா காலகட்டம், சோஹோ நிறுவனத்தில் அமைப்புரீதியாக என்ன மாற்றத்தை கோரியிருக்கிறது?

வீட்டிலிருந்து பணிபுரிதல் என்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், வீட்டிலே இருப்பது பல பணியாளர்களுக்கு மன அழுத்தம் தரக்கூடியதாகவும் இருக்கிறது. அதனால் திருநெல்வேலி, ஸ்ரீவில்லிப்புத்தூர், மதுரை ஆகியவற்றில் உள்ள சிறு, குறு நகரங்களில், கிராமப்புறங்களில் அலுவலகங்களைத் திறந்துகொண்டிருக்கிறோம். அதுவும் தினசரி அலுவலகம் வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வாரத்துக்கு சில நாட்கள் மட்டும் வந்தால் போதும்.

‘சோஹோ ஸ்கூல் ஆஃப் லேர்னிங்’ பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்காக செயல்பட்டு வருகிறது. தற்போது பள்ளிப் படிப்புக்கென்று‘கலைவாணி’ என்ற பெயரில் பள்ளிகளைத் தொடங்கியிருக்கிறோம். தற்போது தென்காசி, தேனி, மயிலாடுதுறை ஆகிய மூன்று இடங்களில் அந்தப் பள்ளிகள் உள்ளன. வழமையான பள்ளியாக அல்லாமல், தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் (என்ஐஓஎஸ்) முறையில் அவை செயல்படும்.

கரோனா சூழல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு ஒன்றரை வருடத்துக்கு மேலாகிறது. தற்போது பள்ளி இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது மாணவர்களின் கற்றலில் எவ்வகையான பாதிப்பை ஏற்படுத்தும்?

சீனாவில் 1966ம் ஆண்டு மாவோ தலைமையில் கலாச்சாரப் புரட்சி ஏற்பட்டபோது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பள்ளிகள், கல்லூரிகள் முழுமையாக மூடப்பட்டன. ஆனால், அது சீனாவின் வளர்ச்சியில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவேயில்லை. ஆக, இந்த ஓராண்டு காலம் பள்ளி, கல்லூரிகள் மூடியிருப்பது எந்த தாக்கத்தை ஏற்படுத்தாது. தவிர, தேர்வுகளின் மீது எனக்கு நம்பிக்கைக் கிடையாது. நீட் மட்டுமல்ல அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு எதிரானவன் நான். திறமையை அளவிட போட்டித் தேர்வு சரியான வழிமுறை இல்லை. அந்த வகையில், தேர்வுகள் ரத்தாகி இருப்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. ஒட்டுமொத்தமாக நமது கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டிய சூழலில்தான் நாம் இருக்கிறோம்.

தாய் நாட்டின் சூழலை மேம்படுத்த வேண்டும் என்ற இலக்கோடு நீங்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்புனீர்கள். உங்கள் உள்ளுக்குள் இருக்கும் தேசியவாதமும், தற்போதையை மத்திய அரசு முன்வைக்கும் தேசியவாதமும் ஒன்றா? மத்திய அரசு முன்னெடுக்கும் மத அடிப்படையிலான தேசியவாதம் மீது உங்களுக்கு எந்த விமர்சனமும் இல்லையா?

தேசியவாதத்தை ஒற்றைப் புள்ளியாக சுருக்கிவிடமுடியாது. கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் என பல தளங்களில் அது செயல்படுகிறது.

ஒரு உதாரணம்... இந்தியாவைப் பொருத்தவரையில் பெற்றோரை அவர்களது இறுதிக் காலத்தில் கவனித்துக்கொள்வது பிள்ளைகளின் கடமை. ஆனால், அது சட்டரீதியான கட்டாயமில்லை. கலாச்சாரரீதியான கடமை அது. அமெரிக்கவில் அப்படி கிடையாது. அதனால் அங்கு வயதான பெற்றோர்கள் கைவிடப்படுகிறார்கள். பிள்ளைகளுக்கு அது குறித்து எந்தக் குற்ற உணர்வும் கிடையாது. ஆனால், இந்தியாவில் அப்பட. பொறுப்பின்றி இருந்துவிட முடியாது. இவ்வாறான பண்புகளை முன்வைப்பதை, மீட்டெடுப்பதை கலாச்சாரரீதியிலான தேசியவாதம் என்று கூறலாம்.

பொருளாதாரரீதியாகப் பார்த்தால், மாவட்ட அளவில், மாநில அளவில் பலதரப்பட்ட பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதும் இந்தியா தற்சார்பு உடையாத மாற வேண்டும் என்று கூறுவதும் பொருளாதாரரீதியிலான தேசியவாதம்தான். அரசியல்ரீதியான தேசியவாதமாக இந்திய இறையாண்மையை சொல்லாம். அதற்காக தேசியவாதம் சார்ந்து அரசின் எல்லாக் கருத்துகளையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. சில விசயங்களில் அரசின் பார்வையுடன் எனக்கு உடன்பாடு உண்டு. சில விசயங்களில் உடன்பாடு இல்லை.

இந்தியாவில், இன்னும் கவனம் செலுத்தப்படாத, ஆனால் பெரும் பெரும் சந்தை வாய்ப்பைக் கொண்டிக்கும் பிரிவுகளாக எவற்றைச் சொல்வீர்கள்?

கிராமப்புற மக்களின் திறமைகளை இன்னும் நாம் முழுமையாக பயன்படுத்தவில்லை. அதை பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். சோஹோ அதை நோக்கிதான் பயணித்துக்கொண்டிருக்கிறது.

தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x