

‘இந்து தமிழ் திசை’, லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் வழங்கும் ‘நலமாய் வாழ’ இணையவழி சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிநாளை காலை நடைபெற உள்ளது.இதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைக்கிறார்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் வீட்டிலேயே இருக்கும் மக்களிடம் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், இணைய வழியில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில், கரோனா தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் பற்றியும், கண் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘நலமாய் வாழ’ எனும் இணைய வழி நிகழ்வு 6-ம் தேதி ஞாயிறு (நாளை) காலை 11 மணிக்கு நடக்க உள்ளது. இந்த நிகழ்வை லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் இணைந்து வழங்குகிறது.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த நிகழ்வைத் தொடங்கிவைத்து, கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்துகிறார்.
வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு, தமிழகத்தில் மருத்துவப் பணி செய்பவர்களின் பணிநெறிமுறைகள் குறித்து பேராசிரியர் டாக்டர் சிஎம்கே ரெட்டி, கரோனா அறிகுறிகள், அதில் இருந்து விடுபடும் வழிமுறைகள் குறித்து தமிழக அரசின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் குகானந்தம், கரோனா ஊரடங்கு காலத்தில் செல்பேசி, கணினி, லேப்டாப் அதிக அளவு பயன்படுத்துவதால் பார்வைத் திறன் குறைபாடு அடையாமல் பார்த்துக் கொள்வது மற்றும் கண் பாதுகாப்பின் அவசியம் குறித்து டாக்டர் பிரதீபா நிவேன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.
வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர்கள் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட அனுமதித்த அரசுக்கு நன்றி தெரிவித்து லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிர்வாக இயக்குநர் முகமதுகனி உரையாற்றுகிறார்.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் https://bit.ly/3ccNkBG என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.