

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மறைந்த மருத்துவர் லட்சுமி நரசிம்மன் மனைவி அனுராதா உருக்கமான கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியதாவது:
எனது கணவர் லட்சுமி நரசிம்மன். அரசு மருத்துவர். அரசு மருத்துவர்கள் குறைந்தபட்ச கவுரவத்தோடு வாழ வேண்டும் என்பதற்காக நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பலகட்டப் போராட்டங்களை நடத்தியவர். பல்வேறு அரசு மருத்துவ சங்கங்களை ஒருங்கிணைந்து அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை (FOGDA) உருவாக்கி, அதன் கன்வீனராக இருந்து செயல்பட்டார். பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.
கடந்த அதிமுக அரசு அவருக்கு கொடுத்த பல்வேறு மன உளைச்சல்கள் காரணமாக, அவர்கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி எங்களை விட்டுப் பிரிந்தார். அன்றைய தினமே அவரது உடலை கையில் வைத்துக்கொண்டு அன்றைய முதல்வர் பழனிசாமி, அன்றைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம், “அவரது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுங்கள்’’ என்று கெஞ்சினேன். ஆனால் அன்றைய அதிமுக அரசு செவிசாய்க்கவில்லை.
எங்கள் கொள்கைகள் பலிக்க வேண்டும்
நாங்கள் மிகத் துயரத்தோடு கடந்த காலங்களைக் கடந்து, ஆட்சி மாற்றத்துக்காக காத்திருந்தோம். இப்போது ஆட்சி மாறியிருக்கிறது. எங்கள் கனவு பலித்திருக்கிறது. எங்கள் கொள்கைகளும் பலிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள், அவர் இறந்த பிறகும் இன்னும் கோரிக்கைகளாகவே இருக்கின்றன.
அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும். அவரது உயிர் அமைதியடைய வேண்டும். அதனால், அவரது நியாயமான கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றித் தரவேண்டும். அவரை விட்டுப் பிரிந்த இந்த ஆறாத் துயரிலும் மன வேதனையிலும் இருந்து பேசுகிறோம். அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை செவி மடுத்து அவற்றை நீங்கள் நிறைவேற்றித் தரவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.