

இயற்கையை பாதுகாக்க குழந்தைகளுக்கு வீட்டிலிருந்தே சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கூடிய கல்வியை கற்பிப்பது அவசியம் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ம் தேதி சர்வதேச சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது. 1972-ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில், சர்வதேச அளவில் இயற்கைக்கு பாதகம் இல்லாத வளர்ச்சியை மேற்கொள்வது குறித்த செயல்பாடுகளை செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்றுமுதல், சர்வதேசசுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ம் தேதி, ஒரு கருப்பொருளைகொண்டு பணிகள் நடைபெறுகின்றன. இந்தாண்டின் கருப்பொருள் ‘சூழல் அமைப்பை மீளப் பெறுதல்' (Eco Restoration).
இதுதொடர்பாக நீலகிரி மாவட்டஇயற்கை மற்றும் சமூக அறக்கட்டளை அறங்காவலர் சிவதாஸ் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தின் சூழல் அமைப்பை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு தனி மனிதனுடைய செயல்பாடுதான் மிக அவசியம். ஈர நிலங்கள், அதன் பல்லுயிர் தன்மை ஏரிகள், குளங்கள் மறுசீரமைப்பு நீராதார பகுதிகளை தூர்வாருதல், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களை பசுமையாக்க தனி அமைப்புகளை உருவாக்கி செயல்படுத்த உட்கட்டமைப்பு ஏற்படுத்துவது மிக அவசியம்.
வனப்பகுதிகள், புல்வெளி பகுதிகள் சிறிய சோலைக்காடுகளில் எஞ்சி இருக்கக்கூடிய பகுதிகள்அனைத்தையும் பாதுகாப்பதே இன்றைய முக்கிய இயற்கைக்கான பணியாக முன்னெடுக்க வேண்டும்.மக்காத பொருட்களை பொறுப்போடு மறுசுழற்சிக்கு ஆட்படுத்த வேண்டும்.
மருத்துவக் கழிவுகளை முறையாக கையாள வேண்டும். தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் புகை காற்றிலும், நீராதாரங்களிலும் கலப்பதை முற்றிலும் தவிர்க்க புதிய தொழில்நுட்பத்தை முன்னெடுக்க வேண்டும். காணுயிர்கள் சுதந்திரமாக வாழ ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இயற்கையை பாதுகாக்க, வீட்டிலிருந்தே குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கூடிய கல்வியை கற்பிப்பது அவசியம்.
தேவையற்ற ரசாயன பொருட்கள் பிளாஸ்டிக் கழிவுகளை, வீட்டில் அதிகமாக சேகரிப்பதை தவிர்ப்பது இயற்கை சார்ந்த பொருட்களோடு வாழ பழகுவது ஆகியவற்றை நாட்டுக்கு செய்யும் முக்கிய பணிகளாக கருத வேண்டும்.
மரக்கன்றுகளை நடுவது மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான பணியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது ஒரு நிலைப்பாடு மட்டுமே. மக்களுடைய வாழ்க்கைச் சூழல் முழுமையாக மாறும்போது மட்டுமே சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். பொழுதுபோக்குக்காக மட்டுமேபயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தை, அறிவியல்பூர்வமான செயல் திட்டத்துக்கு இளைய சமுதாயம் பயன்படுத்த வேண்டும்’’ என்றார்.