

அனைவருக்கும் கரோனா தடுப்பூசி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர்கள், ஆளுநர்கள் வழியாக குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனு அளித்து வருவதாக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கரோனா 2-வது அலை இந்தியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்தும், அதனை எதிர் கொள்வதற்கான எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய பாஜக அரசு எடுக்கவில்லை. இதனால் கோடிக்கணக்கான இந்திய மக்கள் மீள முடியாத துயரத்தில் தவிக்கின்றனர்.
கரோனாவிடம் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க தடுப்பூசி ஒன்றுதான் வழி. ஆனால் அனைவருக்கும் தடுப்பூசிகள் போட முறையான நடவடிக்கைகளை மோடி அரசு எடுக்கவில்லை. இந்தியர்களுக்கே தடுப்பூசிகள் இல்லாத நிலையில் இதுவரை 10 கோடி தடுப்பூசிகளை வெளி நாடுகளுக்கு மோடி அரசு ஏற்றுமதி செய்துள்ளது.
பாஜக ஆளும் குஜராத் போன்ற மாநிலங்களுக்கு அதிகமான தடுப்பூசிகளை மோடி அரசு வழங்கி வருகிறது. தமிழகத்துக்கு மிகக் குறைவான அளவே தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.
மக்கள் கரோனா நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு மோடி அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். தட்டுப்பாடின்றி அனைவருக்கும் தடுப்பூசிகள் போட மத்திய அரசுக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர்கள், மாநில ஆளுநர்கள் மூலமாக குடியரசுத் தலைவருக்கு மனுக்களை அனுப்பி வருகிறோம். அதுபோல தமிழகம் முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர்கள், தமிழக ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.