Published : 05 Jun 2021 03:13 AM
Last Updated : 05 Jun 2021 03:13 AM

தண்டரை சித்த மருத்துவ சிகிச்சை முகாமில் பெரும்பாலானோர் குணமடைந்ததால் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது: சித்த மருத்துவர்கள் பெருமிதம்

தண்டரை தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சித்த மருத்துவர்கள் யோகா பயிற்சிகளை வழங்கினர்.

திருக்கழுக்குன்றம்

திருக்கழுக்குன்றத்தை அடுத்த தண்டரை கிராமத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட சித்த சிகிச்சை மையத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்படமாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன.

இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, திருக்கழுக்குன்றத்தை அடுத்த தண்டரை கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், சித்த மருத்துவசிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 150 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த சித்த மருத்துவ மையத்தை, அமைச்சர் தா.மோ.அன்பரசன் மே 24-ம் தேதி பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

இதையடுத்து, சித்த மருத்துவ சிகிச்சை பெற விரும்பிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 80-க்கும் மேற்பட்ட நபர்கள், மேற்கண்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், பெரும்பாலானநபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், 8 பேர் மட்டுமே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது. யோகாவுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சையில் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் விரைவாககுணமடைந்ததாக சித்த மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, மேற்கண்ட சிறப்பு மருத்துவமனையின் சித்த மருத்துவர் நா.வானதி நாச்சியார் கூறியதாவது: தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மூலிகை தாம்பூலம் உட்பட அனைத்து விதமான சித்த மருந்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. குறிப்பாக, நசியம் சிகிச்சை முறையில் நொச்சி தைலம் மூலம் தொண்டை பகுதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதேபோல், விரலி மஞ்சளை நெருப்பில் சுட்டு அதிலிருந்து வெளிப்படும் புகையை மூக்கு வழியாக சுவாசிப்பது, நாள்தோறும் வேப்பங்குச்சி மூலம் பற்கள் மற்றும் வாய் பகுதியை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சித்த மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, நாள்தோறும் காலை மற்றும் மாலையில் யோகா பயிற்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.

லிங்க முத்திரை பயிற்சி

குணமடைந்து வீடு திரும்பிய நபர்களிடம், லிங்க முத்திரை எனப்படும் யோகா முறையை தினமும் காலையில் செய்யுங்கள் என அறிவுறுத்தியுள்ளோம். மேலும், வீட்டில் கடைபிடிக்க கூடிய ஒருசில சித்த மருத்துவ சிகிச்சை முறை குறித்து தெரிவித்துள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x