

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள எச்.எல்.எல். பயோடெக் எனப்படும் மத்திய அரசின் தடுப்பூசி மையத்தில் உயர் அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.
செங்கல்பட்டு அருகே திருமணி பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான எச்.எல்.எல். பயோடெக் என்ற தடுப்பூசி மையம் 100 ஏக்கர் நிலத்தில் 55,685 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி, ஹெபடைடிஸ் பி தடுப்பூசி, ஹீமோபிலஸ், ரேபிஸ் தடுப்பூசி உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கும் வகையில் உள்கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு அதற்கான ஆய்வுகள் நடைபெற்றன. தடுப்பூசி தயாரிக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த இயந்திரங்களும் இந்த மையத்தில் உள்ளன. இங்கு தடுப்பூசி தயாரிக்கும் பணிக்காக உயிரி தொழில்நுட்பவியல் பயின்ற வல்லுநர்கள் 200-க்கும்மேற்பட்டோர் பணியில் அமர்த் தப்பட்டுள்ளனர்.
திட்டச் செலவு அதிகரிப்பு
காலதாமதம் காரணமாக, இந்ததிட்டத்துக்காக அங்கீகரிக்கப்பட்ட திட்டச் செலவு ரூ.594 கோடியிலிருந்து ரூ.904.33 கோடியாக அதிகரித்தது. திருத்தப்பட்ட திட்ட அறிக்கை 2018-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் நிதி அமைச்சகம் இதை நிராகரித்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து இந்த தடுப்பூசி மையம் செயல்பாட்டுக்கு வரவில்லை.
உலகம் முழுவதும் கரோனாவுக்கு தடுப்பூசி தயாரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, இந்த மையத்திலும் தடுப்பூசி தயாரிக்க வேண்டும் என்றும், இந்த மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. போராட்டங்களையும் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இந்த நிறுவனத்தை ஆய்வு செய்தார். அப்போது இதைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்தெரிவித்தார். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முதல்வர் ஆய்வு
இந்தச் சூழ்நிலையில் முதல்வர்மு.க.ஸ்டாலின் இந்த நிறுவனத்தை ஆய்வு செய்தார். "இந்தநிறுவனத்தில் தடுப்பூசி தயாரிக்கவேண்டும் என்றும், இல்லை என்றால் தமிழக அரசுக்கு குத்தகைக்கு கொடுக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினார். மேலும் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை நேரில் அழைத்து இந்த நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனமான பாரத் பயோடெக் நிர்வாக இயக்குநர் சுசித்ரா, செயல் இயக்குநர் சாய் பிரசாத் ஆகியோர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். தடுப்பூசி தயாரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆய்வு 7 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களை இயக்கிப் பார்த்துள்ளனர்.
இந்த ஆய்வின்போது வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆய்வு முடிவுகள் குறித்து மத்திய, மாநில அரசுக்கு விரைவில் தெரிவிக்க உள்ளனர். அதன் அடிப்படையில் இந்த மையத்தை இயக்குவது குறித்து முடிவு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.