கோப்புப்படம்
கோப்புப்படம்

எந்தக் கட்சிக்குப் போனாலும் முதல்வர் கனவு பலிக்காது: நமச்சிவாயம் மீது சிவா எம்எல்ஏ விமர்சனம்

Published on

புதுச்சேரி பாஜக சட்டப்பேரவை கட்சி தலைவர் நமச்சிவாயத்தை, புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ரங்கசாமி நல்லாட்சியை தந்து கொண்டிருப்பதாக சான்று தரும் நபர் கடந்த 2008-ல் ரங்கசாமி ஆட்சியை கலைக்க வேகமாக இருந்தார். இது புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் தெரிந்த செய்திதான்.

அதுபோல் கடந்த ஆட்சியில் ஆரம்பம் முதல், இறுதிக்காலம் வரை அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு, தேர்தல் நேரத்தில் கட்சி மாறினார்.

அண்மையில், தேர்தலுக்கு முன்பு அவர் காலில் விழுந்தவர் காலையே வாரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுபற்றிய பேச்சை திசை மாற்றுவதற்காக திமுகவை குறைச் சொல்லி வருகிறார்.

தற்போது சேர்ந்துள்ள கட்சியில், ஏற்கெனவே அக்கட்சியில் நீண்ட காலமாக உழைத்து அடித்தளமிட்டுள்ளவர்களை புறம் தள்ளி, அவர்களை மிதித்து பதவி பெற துடிக்கிறார். அதற்காக திமுகவை வசை பாடி வருகிறார். இதை அவர் தற்போது சேர்ந்துள்ள கட்சியினர் மட்டுமின்றி, புதுச்சேரி மக்கள் அனைவரும் உணர்ந்தும், புரிந்தும் உள்ளனர்.

ஆனாலும் திமுகவையும், கட்சியினரையும் யார் விமர்சிப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் உங்களுடைய அரசியல் நிலை என்ன என்பது தெரியும். கடந்த கால ஆட்சியில் துணை நிலை ஆளுநரோடு ரகசிய கூட்டு வைத்துக் கொண்டு ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதும் தெரியும். தற்போது இருக்கும் கட்சிக்கு முன்பு இருந்த கட்சியில் அக்கட்சிக்கு துரோகம் செய்து, அந்தக் கட்சியில் இருந்து வெளியேறியவர்தான் நீங்கள். எந்தக் கட்சிக்கு போனாலும் உங்களுடைய முதல்வர் கனவு பலிக்காது என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in