Published : 05 Jun 2021 03:13 AM
Last Updated : 05 Jun 2021 03:13 AM
புதுவை பாஜக சட்டப்பேரவை கட்சித்தலைவர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுவை திமுக சட்டமன்றக் கட்சி தலைவர் சிவா மற்றும் ‘இலக்கியவாதி’, ‘தமிழ் பற்றாளர்’ என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சுப.வீரபாண்டியன் ஆகியோர் அரசியல் வரம்பு மீறி அநாகரிகத்தோடு தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் வர் ரங்கசாமியை பற்றியும், பாஜகவைப் பற்றியும் தரம் தாழ்ந்து தொடர்ந்து விமர்சித்து வருவது கண்டனத்துக்குரியது.
புதுச்சேரியில் காங்கிரஸ்- திமுக கூட்டணியை தேர்தல் மூலம் புதுச்சேரி மக்கள் விரட்டியடித்த பிறகும், தொடர்ந்து வீண் விதண்டாவாதம் பேசி, இருவரும் தரம் தாழ்ந்து அரசியல் விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
356வது சட்டப் பிரிவின் மூலம், ஆளுநர் மூலம், சபாநாயகர் மூலம், ஆட்சியைக் கவிழ்ப்பதில் அகில இந்திய அளவில் கின்னஸ் சாதனை புரிந்த காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டு, ஜனநாயகத்தைப் பற்றி திமுக பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது. 1990 ம் ஆண்டு ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் அல்லாடிக் கொண்டிருந்த திமுக கூட்டணி, நள்ளிரவில் நியமன சட்டமன்ற உறுப்பினர்களை பதவியேற்க வைத்து, ஆட்சி அதிகாரப் பசியை குறுக்கு வழியில் தீர்த்துக் கொண்டதை மக்கள் மறக்கவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் ரங்கசாமி மக்கள் நலத்திட்டங்களை தொய்வில்லாமல் தொடர்ந்து செய்து வருகிறார். அமைச்சரவை விரிவாக்கம் சம்பந்தமாக நடைபெறும் எங்கள் கூட்டணியின் பேச்சுவார்த்தையில் தேவையில்லாமல் திமுக மூக்கை நுழைக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி, குறுக்கு வழியில் பதவி பெறலாம் என்கிற குறுகிய எண்ணத்தோடு முதல்வரையும், பாஜகவையும் விமர்சனம் செய்கிற சிவாவின் பகல் கனவு என்றும் பலிக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT