ஆத்தூர் குளத்தை சீரமைக்கும் பணி தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் குளத்தை தூர்வாரும் பணிகளை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஆட்சியர் செந்தில் ராஜ் உள்ளிட்டோர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் குளத்தை தூர்வாரும் பணிகளை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஆட்சியர் செந்தில் ராஜ் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை கனிமொழி எம்.பி நேற்று தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் உள்ள முக்கிய குளங்களில் ஒன்று ஆத்தூர் குளம். சுமார் 417 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் புதர்மண்டி, மணல் மேடாகி காணப்படுகிறது. இதனால் போதிய தண்ணீர் தேங்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தனியார் நிறுவனத்தின் உதவியுடன் ஆத்தூர் குளத்தை தூர்வாரி சீரமைக்க கனிமொழி எம்பி நடவடிக்கை எடுத்தார். சீரமைப்பு பணிகளை நேற்று அவர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், வைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா, ஏஎஸ்பி ஹர்ஷ்சிங், பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் ஞானசேகர், செயற்பொறியாளர் பத்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து என்விரான்மெண்ட் பவுண்டேசன் ஆப் இந்தியா என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆத்தூர் குளத்தை முழுமையாக தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து அனுமதிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.

குளத்தில் இருந்து மண் எதுவும் வெளியே எடுத்துச் செல்லப்பட மாட்டாது. கரைகள் 2 அடுக்குகள் கொண்டதாக பலப்படுத்தப்படும். புதர்கள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டு ஆழப்படுத்தப்படும். குளத்தின் உள்ளே சிறு, சிறு தீவு போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு பறவைகள் உள்ளிட்ட மற்ற உயிரினங்கள் வாழ்வதற்கான வசதிகள் செய்யப்படும். இதன் மூலம் பல்லுயிர்களை பாதுகாக்கும் குளமாக மாற்றப்படும். தண்ணீர் வருவதற்கான கால்வாயும் சீரமைக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in