

கரோனாவால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வசதி இல்லாதவர்களுக்காக, தஞ்சாவூர் மாவட்டம் ஆலத்தூரில் கிராம மக்கள் சுயசார்பு தனிமைப்படுத்துதல் மையத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனையிலும், கரோனா தனிமைப்படுத்துதல் மையத்திலும் சிகிச்சை பெற்ற பிறகு வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆனால், கிராமப்புறங்களில் பெரும்பாலும் சிறிய அளவிலான வீடுகளே உள்ளதால், அங்கு கழிப்பிட வசதிகள் போன்றவை இருப்பதில்லை. இதனால், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் வீட்டுத் தனிமையில் இருப்பது சிரமம் என்பதுடன், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தொற்று பரவவும் வாய்ப்புள்ளது.
இதை உணர்ந்த பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஆலத்தூர் கிராம மக்கள், ஊராட்சி மன்றத் தலைவர், வெளிநாடு வாழ் இளைஞர்கள், தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிராம சுயசார்பு தனிமைப்படுத்துதல் மையத்தை ஏற்படுத்தி உள்ளனர். இதற்கு, ஆட்சியர் ம.கோவிந்தராவிடம் அனுமதியும் பெற்றுள்ளனர். ஆலத்தூர் கிராம மக்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியபோது, “கிராம சுயசார்பு தனிமைப்படுத்துதல் மையத்தில் 15 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, இங்கு தற்போது 5 பேர் தங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான 3 வேளை உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவ்வப்போது அரசு மருத்துவர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, தேவையான மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.