சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மதுரையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் 19-ல் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது போலீஸார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தது தொடர்பான விவகாரம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 10 பேரை கைது செய்தது. இதில் பால்துரை என்பவர் கரோனாவால் உயிரிழந்தார்.

ஸ்ரீதர் உட்பட 9 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை மதுரையிலுள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 9 பேருக்கும் 2027 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜா, தாமஸ் ஃபிரான்சிஸ் ஆகியோர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

ஏற்கெனவே ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்குடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in