

திருநெல்வேலி மாநகரில் பொதுமக்கள் அமைதியாக வாழும் சூழலை உருவாக்குவோம் என்று மாநகர காவல்துறை புதிய ஆணையர் என்.கே. செந்தாமரை கண்ணன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையராக இருந்த அன்பு கடந்த வாரம் தென்மண்டல ஐஜியாக மாற்றப்பட்டார். இதையடுத்து மாநகரின் புதிய காவல்துறை ஆணையராக சென்னையில் அமலாக்கத்துறை ஐஜியாக இருந்த செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டார்.
மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கெனவே பணிபுரிந்துள்ளதால் இங்குள்ள பிரச்சினைகள் குறித்து தெரியும். தற்போது கரோனா பரவலை கட்டுப்படுத்துவது மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்துவோம். கரோனாவை கட்டுக்குள் கொண்டுவர பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
திருநெல்வேலி மாநகரில் சட்டம் ஒழுங்கு, குற்றங்கள், போக்குவரத்து பிரச்சினைகள் குறித்து தெரிந்துகொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள் அமைதியாக வாழும் சூழலை உருவாக்குவோம். எந்த பிரச்சினையானாலும் காவல்துறை நடுநிலையுடன் செயல்படும். பிரச்சினைகள் குறித்து காவல்துறைக்கு அளிக்கப்படும் மனுக்கள் மீது உரிய தீர்வு காணவும் முன்னுரிமை அளிக்கப்படும்.
பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அதிகளவில் உள்ள இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தும்போது குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பாக அமைகிறது. அவற்றில் பதிவாகும் காட்சிகள் வழக்கு விசாரணைகளில் காவல்துறைக்கு உதவியாக இருக்கும்.
எனவே மற்ற பகுதிகளைப்போல் இங்கும் அதிகளவில் சிசிடிவி கேமிராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும், வணிகர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு இந்த கேமிராக்களை பொருத்துவதற்கு முன்வர வேண்டும்.
முறையான ஆவணங்கள் இல்லாமல் பொதுமக்களுக்கு கடன் கொடுத்து அதிக வட்டி வசூலிக்கும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் தொடர்பாக புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் கந்துவட்டி புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். கடன்பெறும்போதும், வட்டி செலுத்தும்போதும் அதற்கான உரிய ஆவணங்களை பொதுமக்கள் வைத்திருக்க வேண்டும்.
எவ்வித ஆவணங்களும் இல்லாமல் புகார்களை அளித்தால் சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
…