Last Updated : 04 Jun, 2021 08:10 PM

 

Published : 04 Jun 2021 08:10 PM
Last Updated : 04 Jun 2021 08:10 PM

கோவையில் தடுப்பூசி செலுத்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் அலைமோதும் கூட்டம்

கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் தடுப்பூசி மையங்களை பள்ளி மைதானங்களுக்கு மாற்ற வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவையில் தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சிப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன.

தடுப்பூசிக்காக மக்கள் அதிகளவில் கூட்டம் கூடுதவதால், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், தொற்று பாதிப்பை தவிர்க்கவும், மாநகராட்சி பள்ளிகளுக்கு தடுப்பூசி மையங்கள் இடம் மாற்றப்பட்டன.

ஆனால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து தடுப்பூசி மையங்கள் மாற்றப்படவில்லை. கோவையில் சோமனூர், அரிசிபாளையம், பூலுவப்பட்டி, கஞ்சம்பட்டி, நெகமம், நல்லட்டிபாளையம், தாளியூர், காரமடை, பொகலூர் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களாக செயல்பட்டு வருகின்றன. இங்கு கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இங்கேயே பொதுமக்களுக்கான தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான டோக்கன் பெறுவதற்கு அதிகாலை முதலே மக்கள் கூடிவிடுகின்றனர். ஒருவரோடு ஒருவர் மோதியபடி டோக்கன் பெற முண்டியடிக்கின்றனர்.

டோக்கன் பெற்ற பிறகு மணிக்கணக்கில் ஊசி செலுத்துவதற்காக வரிசையில் இடைவெளியில் இல்லாமல் காத்திருக்கின்றனர். கரோனா நோயாளிகளும் அங்கு வருவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இது தொடர்பாக, தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொதுமக்கள் கூறும்போது, "மாநகராட்சியைப் போல, ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளி மைதானங்களுக்கு தடுப்பூசி செலுத்தும் மையங்களை மாற்ற வேண்டும். அங்கு இடைவெளியுடன் மக்கள் நிற்கவோ, அமரவோ ஏற்பாடு செய்து டோக்கன் வரிசைப்படி அழைக்கலாம்.

மேலும், தடுப்பூசி கையிருப்பு, எத்தனை மணிக்கு டோக்கன் வழங்கப்படும், எப்போது வரை தடுப்பூசி செலுத்தப்படும் என்ற அறிவிப்பு பலகையையும் தினந்தோறும் வைக்க வேண்டும். இதனால், யாரையும் அணுகி மக்கள் தகவல் கேட்க வேண்டியிருக்காது. தேவையில்லாமல் மக்கள் கூடுவதும் தவிர்க்கப்படும்" என்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் கூறும்போது, “மாநகரைப்போல ஊரகப் பகுதிகளிலும் தடுப்பூசி முகாமை பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பது குறித்து சுகாதாரத்துறையினருக்கு அறிவுறுத்தப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x