வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 வயதுப் பெண் சிங்கம் பலி: 13 சிங்கங்களுக்கு கரோனா

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கரோனா அறிகுறி தென்பட்ட 9 வயதுப் பெண் சிங்கம் உயிரிழந்தது.

இது தொடர்பாக, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சிறப்புச் செயலாளர் இன்று (ஜூன் 04) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 13 ஆசிய சிங்கங்களுக்கு கோவிட் - 19 அறிகுறிகள் உள்ளதாக, நேற்று (ஜூன் 03) கண்டறியப்பட்டது. சில சிங்கங்களுக்கு அறிகுறிகள் தென்பட்டதுடன் நீலா என்ற 9 வயதுள்ள பெண் சிங்கம் அன்று மாலை உயிரிழந்தது.

இதேபோன்ற நிகழ்வுகள் ஹைதராபாத், ஜெய்பூர், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள இட்டாவா ஆகிய இடங்களில் உள்ள ஆசிய சிங்கங்கள் கானுலா நடைபெறும் பூங்காக்களில் உள்ள சிங்கங்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அனைத்து ஆசிய சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டன. பூங்கா அதிகாரிகளால் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தினரைக் கலந்தாலோசித்து நோயுற்ற சிங்கங்களை குணப்படுத்தும் பொருட்டு நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் இதர மருந்துகள் வழங்கப்பட்டன. தொற்றுக்கேற்ப மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.

சிங்கங்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இந்திய தேசிய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, போபாலில் உள்ள ICAR-NIHSAD என்ற ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

மேலும், அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் மருத்துவ வல்லுநர்களைப் பூங்காவின் கால்நடை மருத்துவர்களுக்கு உதவும் பொருட்டு அனுப்பியுள்ளது. இக்குழுவானது, பூங்காவில் உள்ள இதர விலங்குகளுக்கு SARS-CoV2 தொற்று பரவாமல் பாதுகாப்பது குறித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மேலும், தடுப்பு நடவடிக்கையாக விலங்குகளைக் கையாளும் பணியாளர் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளுமாறு நேற்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள விலங்குகளின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20.04.2021 முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயிரியல் பூங்காக்களில் பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 30.06.2021 அன்று விலங்குகளைக் கையாளும் பணியாளர்களுக்குச் சிறப்பு முகாம் ஒன்று நடத்தப்பட்டு 61 சதவீதப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

விலங்குகளிடமிருந்து எடுக்கப்பட்ட SARS-CoV2 நுண்ணுயிரின் மரபணுவினை வகைப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வரும் ஆய்வகமான LACONES-CCMB என்ற ஆய்வகம் விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளது.

மேலும், துறையின் அலுவலர்கள் இதுகுறித்து தேசிய அளவில் உள்ள துறை நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் கலந்தாலோசனை செய்து வருகின்றனர்".

இவ்வாறு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சிறப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in