மண்டைக்காடு தீவிபத்து உண்மை நிலை அறிய விசாரணைக்குழு அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு

மண்டைக்காடு தீவிபத்து உண்மை நிலை அறிய விசாரணைக்குழு அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு
Updated on
1 min read

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கருவறையில் ஏற்பட்ட தீவிபத்திற்கான உண்மை நிலையை அறிவதற்கு 4 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கருவறையில் கடந்த 2ம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்து கோயில் நிர்வாகத்தின் அலட்சியமே என பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டு விடுக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு கோயில் கருவறை, மற்றும் சேதமடைந்த பகுதிகளை பழமைமாறாமல் உடனடியாக சீரமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார்.

அவர் தீவிபத்தால் சேதமடைந்த கோயில் கருவறை பகுதி, மற்றும் வளாகங்களைப் பார்வையிட்டார். அங்கு நின்ற இந்து அமைப்பினர், மற்றும் பக்தர்களின் கோரிக்கை மனுக்களை அவர் பெற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்; மண்டைக்காடு கோயில் தீவிபத்திற்கான காரணம் குறித்த உண்மை நிலையை அறியும் வகையில் மாவட்ட ஆட்சியர், .எஸ்.பி., மாவட்ட வனத்துறை அலுவலர், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அடங்கிய 4 பேர் கொண்ட விசாரணைகுழு அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கோயில் குருக்கள், பூஜாரி உட்பட பொறுப்பில் இருந்த 8 பேரிடம் விசாரணை மேற்கொள்வர். விசாரணையின் உண்மை தன்மை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கருவறை, மற்றும் சேதமடைந்த பகுதிகளை பழமை மாறாமல் ஆகம முறைப்படி புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது தகவல் தொழில்நுட்பட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்..க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in